Thursday, 2 March 2017

பெண்டுலம்

'கிளடக்.. சிடங்.. கோங்ங்ங்...' முந்தைய இரவுக்கு ஃபேர்வல் கொடுத்து வழி அனுப்பியிருந்த எங்கள் வீட்டு கிரில்லை வெளிச்சத்தை வரவேற்க அப்பாவால் திறக்கப்பட்டிருந்த வேளை. விடிந்துவிட்டிருந்தது. அல்லது விடிந்து நெடு நேரமாகி தன் கடவாய்ப் பல் தெரிய சூரியன் நெருப்புச் சிரிப்பை உமிழ்ந்து கொண்டிருந்தது. ஆப்ப சட்டி விளிம்பு வரை அம்மா வார்க்கும் ஆப்பம் போல மொத்தத்தில் இருட்டு இல்லாதிருந்ததை மட்டும் தூங்காமல் தூங்கிக் கொண்டிருந்த எனக்கு புலப்பட்டது. 

சொப்பனத்தில் நீண்ட நாட்களுக்கு பின் வந்திருந்த அதே காட்சிகள். அதே கதாபாத்திரங்கள். செம்மண் கலர் பெயின்ட் அடித்திருந்த ஆன்டிக் ஸ்டைல் வீடு. உட்பக்கமாக இருந்த ஸ்பைரல் படிக்கட்டுகளைக் கடந்து மேலேறிச் சென்று வலது பக்க அறையை அடைந்ததும் அதே குங்குமக் கலர் சேலையில் இப்போது மஞ்சள் தாலி வெளியே தெரிந்த அந்தப் பெண். இதற்கு முந்தைய அந்த சொப்பன எபிசோட்களில் தாலியைப் பார்த்ததாக ஞாபகம் இல்லை. 

கிரில் கூப்பாடு போட்டதில் எனது சொப்பனமானது கலைந்திருந்தது தெரிந்தும், கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு எவாப்பரேட் ஆகிக் கொண்டிருந்த கனவை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு முயற்சித்தும் க்ளைமாக்ஸைக் காண முடியவில்லை. குறைந்தபட்சம் அந்தப் பெண்ணின் முகத்தையாவது ரீகலக்ட் செய்ய முயன்று தோற்றுப் போனேன். எப்படி சரியாக கனவு கடைசி சீனின் போது மட்டும் கலைந்து விடுகிறது? உடனே மறந்தும் விடுகிறது. ஒரு நாவலை தீவிரமாக படித்துக் கொண்டிருக்கும் போது அதன் கடைசிப் பக்கத்தை யாராவது கிழித்து வைத்திருந்தால் ஒரு உணர்வு ஏற்படுமே. அந்த உணர்வுகளை இப்போது அப்பா மீதோ கிரில் மீதோ காட்ட வேண்டுமென இருந்தது எனக்கு. 

சில நேரங்களில் மனித முகங்களைக் கடந்து சென்றாலும் அதில் ஏதோ ஒரு முகம் எங்கோ எதிலோ தடம் பதித்து சென்று விடுகிறது. அந்த முகம் நமக்கு தேவைப்படும் போதோ அல்லது தேவைப்படாத போதோ வாசனையாகவோ ஓசையாகவோ நம் மெடுல்லா ஆப்லெங்கேட்டாவில் தோன்றி மறையத்தான் செய்கிறது. உறக்கம் கொடுத்திருந்த நிறைவை அந்த இன்கம்ப்ளீட் சொப்பனமானது பறித்திருந்ததை எண்ணி ஒரு வித சலிப்போடு எழுந்து பாயைச் சுருட்டி பீரோ இடுக்கில் இடுக்கினேன். 

பிரபுவுக்கு எப்படி விடிந்திருக்கும் என அப்போது எனக்கு தோன்றியிருக்கவில்லை. தோன்ற வேண்டிய நியாயங்களும் இல்லை. ஆப்ப சட்டி இருள் நீடித்துக் கொண்டும் இருக்கலாம். அவன் தங்கியிருந்த அறைக்கு கிரில் இல்லாது, அவன் அந்த வேளையில் சொப்பனத்தில் மாரத்தான் கூட ஓடிக் கொண்டிருக்கலாம். 

காலை நேர இத்யாதி இத்யாதிகளை கடந்து ஒரு கப் ப்ளாக் காஃபி குடித்தால் நன்றாக இருக்கும் என இருந்தது. பால்கனியில் முன்னங்கைகளை ஊன்றிக் கொண்டே ப்ளாக் காஃபி பருகலானேன். எதிர் வீட்டு மார்வாடி பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல ஒன்றன் பின் ஒன்றாக வந்து வாசலில் நின்று கொண்டிருந்தனர். அநேகமாக வகுப்பிற்கு ஒரு பிள்ளை என இருப்பார்களாயிருக்கும். நீல கடுக்கண் போட்டிருக்கும் அந்த சேட்டுக்கு பின்னால் மூன்று முன்னால் டேங்க் மீது இரண்டு என பிள்ளைகள் பைக் முழுதும் மொய்த்திருந்தனர். ஒரு தள்ளு வண்டி கறி கடைக்காரர், ஒரு பட்டர்ஸ்காட்ச் கோன் டிப் வால் கொண்ட நாய், எங்கோ போர்த் தொடுக்கப்பட்ட அமாவாசை வடைக்கு படையெடுத்துக் கொண்டிருந்த காக்கைக் கூட்டம் இவை தவிர தெருவுக்கு உயிர் கொடுக்க ஒன்றுமில்லாதிருந்தது. இரண்டு தெருக்களை இணைத்திருக்கும் கார்னர் வீடு என்பதால் ஃ-க்கின் கீழ் வலப்புள்ளிப் பக்கத்தில் தூரத்தில் ஒரு கத்தரிப்பூ சுடிதார் வருவது தெரிந்தது.

தெருக்கோடி கீழ்வான நீலத்தின் கால் கட்டை விரல் நகம் பெயர்ந்து வருவது போலிருந்தது. ப்ளாக் காஃபியின் கடைசிச் சொட்டு நுனி நாக்கில் பட்டு உள் நாக்கில் படர்ந்து கொண்டிருக்கவும், கத்தரிப்பூ சுடிதார் ஃ-க்கின் நடுப்புள்ளியில் இடம் திரும்பவும் சரியாக இருந்தது. சில நொடிகளுக்கு முன் உயிரற்று கிடந்த தெருவுக்கு மீண்டும் உயிர் வந்திருந்தது. எங்கிருந்தோ ஒரு பட்டாம்பூச்சி பூக்களற்ற பூக்களில் தேன் குடிக்க காற்றில் கை வீசி மிதந்து கொண்டிருந்தது. ஒரு வேளை நான் கனவில் கண்டு மறந்திருந்த அந்த குங்குமக் கலர் புடவைப் பெண் இவள் தானோ? அதற்குள்ளாகவா அந்த ஆன்டிக் வீட்டிலிருந்து இவ்வளவு தூரம் வந்து விட்டிருப்பாள்? எங்கே கழுத்தில் அந்த மஞ்சள் தாலி தொங்குகிறதா பார்த்துவிடுவோமா? எண்ணங்கள் கலைந்து எத்தனிக்கும் முன் ஃக்கின் கீழ் இடப்புள்ளியைத் தொடவிருந்தாள் அவள். உலக உருண்டையின் இரு பக்கங்களாம் சூரிய சந்திர கிண்ணங்கள் மேல் பட்டுப் பட்டு ஒரு பெண்டுலம் போல் ஆஸிலேட் ஆகிக் கொண்டிருந்தது பின்னே விடப்பட்ட அவளது நீண்ட அந்த கரியக் கூந்தல். 

உள்ளறையில் மேசை மீதிருந்த போன்சாய் மர அடர் பச்சையின் கீழ் சார்ஜ் போடப்பட்டிருந்த அலைபேசி, தான் சார்ஜ் ஆகி விட்டிருந்ததன் அடையாளமாய் போன்சாய் பச்சைக்கு சமமாக ஸ்கீரினில் பச்சை போர்வை போர்த்திக் கொண்டிருந்தது. பிரபுவின் பெயரில் வறுமையின் நிறம். 

மிஸ்டு காலில் இருந்து பிரபுவை விடுவித்தேன். 

"இந்த காலர் டியூனை நீங்கள் பெற விரும்பினால் ஸ்டார் மற்றும் ஐந்தை அழுத்தவும். மாத வாடகை முப்பது ரூபாய், நிபந்தனைக்கு உட்..." 

முன்னூற்று ஏழாவது முறையாக அவன் வைத்திருந்த காலர் டியூன் என்னவென்றே தெரியாமல் போனது.

"மச்சி.. போன வாரம் ஊர்ல எனக்கு பொண்ணு பாத்துட்டு வந்தோம்ல.. அந்த பொண்ணோட அப்பா என்னைய பாக்க மதியம் சென்னை வர்றாராம்.. நைட் ஷிப்ட் முடிஞ்சு இப்பதா ரூமுக்கு வந்தன். டையர்டா இருக்குடா.. ஃப்ரீயா இருந்தா வர்றியா? அவர பிக்கப் பண்ணி லஞ்ச் போய்ட்டு ரூமுக்கு வருவோம்?"

கிருஷ்ணகிரி மாவட்டத்துப் பையன் பிரபு. சென்னையில் ஆறு வருடங்களுக்கு முன்பு ஒரு கம்பெனியில் ஒரே நாளில் இன்டர்வியூ அட்டென்ட் செய்து ஒரே டீமில் இரண்டாண்டுகள் வரை ஒன்றாக பணி புரிந்திருந்தோம். அதன் பின்னர் இருவரும் அரை டஜன் கம்பெனிகள் மாறியிருந்தாலும் அந்த இன்டர்வியூ நாள் நட்பு தொடர்ந்திருந்தது. வெங்கிட்டு டெய்லரின் கைங்கர்யத்தில் மொரப்பு காலர் சட்டையோடு நான் பார்த்திருந்த பிரபு, இன்று லோரோ பியானா ஷர்ட்டுக்கு மாறியிருந்ததற்குக் காரணம் ஆறு வருடமும் சென்னையும்! 

ப்ராண்டுகளில் மற்றும் தான் மாற்றமே தவிர பிரபுவுக்கென இருந்த ப்ராண்ட் அப்படியே தான் இருந்தது. வலது மணிக்கட்டில் வாட்ச் கட்டும் ஸ்டைல், ஜீரோ பாயின்ட் ட்ரிம் செய்யப்பட்ட அரை நாள் தாடி, பேன்ட் பாக்கெட்டுகளில் கைகளை நுழைத்து தலையை வலம் சாய்த்து கண்களை இடுக்கிச் சிரிக்கும் மேனரிசம் என அவனுக்காய் இருந்த ப்ராண்டுகள் அப்படியே தான் இருந்தன. 

சென்ற வாரம் பார்த்துவிட்டு வந்திருந்த பெண்ணைப் பற்றி சொல்லியிருந்தான் பிரபு. இதற்கு முன்னர் நிறைய பெண் பார்க்கும் படலங்கள் நடந்திருந்தாலும் ஜாதகம் சரி இல்லை, பொண்ணுக்கு மூக்கு சப்பை, பையனுக்கு பீர் தொப்பை என வழக்கமான குப்பை ரிஜக்‌ஷன்களால் அந்த சடங்கையே வெறுத்திருந்தவன், பொங்கலுக்கு ஊருக்கு சென்றிருந்த போது சர்ப்ரைஸாக அவன் வீட்டாரால் பெண் பார்க்க தூக்கிச் செல்லப்பட்டிருக்கிறான். 

உலகத்தில் எப்படி எல்லாம் சர்ப்ரைஸ் கொடுக்கிறார்கள்?! பில் கட்டாது மொபைல் நெட்வொர்க் ஆப்ரேட்டர் புண்ணியவான் அவுட்கோயிங் புடுங்கிய என் பாடாவதி சர்ப்ரைஸ்கள் போல் அது இருந்திருக்காது தானே? 

சுவற்றில் பல்லிளித்துக் கொண்டிருந்த டிஜிட்டல் க்ளாக் 09:03 என காட்டியது. எண்களின் நடுவில் ஒளிந்து ஒளிர்ந்த அந்த அரைப்புள்ளி மேலும் சில நிமிடங்களை விழுங்கிக் கொண்டிருக்க சற்று முன் பார்த்த பெண்டுல ஜடை நினைவுக்கு வந்தது. கலைந்த கனவும் கத்தரிப்பூ ஜடையும் நினைவிற்கும் மறதிக்கும் இடையே பெண்டுலம் போல் ஆடிக்கொண்டிருந்தது.

மதியத்திற்கு முன்னரே வந்துவிட்டிருந்த அவரை வரவேற்க நாங்கள் இருவரும் பஸ் ஸ்டாண்ட் சென்றிருந்தோம். கூட்டமாக இருக்கும் ஓரிடத்தில் முகம் பார்த்திராத ஒருவரை அடையாளம் காண முற்படும் அந்த தருணங்கள் சற்று படபடப்பான அலாதி மிக்கது. பார்த்ததும் போலியாகச் சிரித்து விடக் கூடாது என்பதால் அதற்கு முன்னரே ஒரு விதமான இளிப்பினை மோவாய்க்குள் இடுக்கிக் கொண்டிருத்தல் வேண்டும். நாமக்காரர், பட்டாணி கொரித்துக் கொண்டிருந்தவர், தினசரியை அக்குளில் சொறுகிக் கொண்டு கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பவர் என ஒவ்வொரு முகமாக நான் அந்த மனிதரை தேடிக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு குங்குமப் பொட்டுக் காரரை நோக்கி கையசைத்தான் பிரபு. உடன் நான் லோட் செய்து வைத்திருந்த புன்னகையை டிரிக்கர் செய்ய, மோவாயில் இருந்து அது ஈஈஈஈஈயென அவரை நோக்கி வெடித்தது. அது அவர் உடன் அழைத்து வந்திருந்த அவர் மகனின் மேலும் பட்டுத் தெரித்தது. 

பரஸ்பர அறிமுகத்திற்குப் பின் பஸ் ஸ்டாண்டை ஒட்டியிருந்த அந்தத் தண்டவாளத்தைக் கடந்து அந்த மல்டி க்யூசஸின் ரெஸ்டாரன்ட் போன்று தோற்றம் அளித்த ஒரு கஃபே உள் சென்றோம். சாம்பாருக்குள் தோய்ந்த மெது வடையினைப் போன்ற அதே இத்துப் போன மெனுவை ஒப்பிக்க ஆரம்பித்தார் வெயிட்டர். க்ளைமாக்ஸுக்கு முந்தியே எக்ஸிட் நோக்கி நடக்கும் பார்க்கிங் அவசரன்கள் போல், அவர் மெனுவை சொல்லி முடிக்கும் முன் நாங்கள் மூவரும் தோசையை சொல்லி முடித்தோம். எங்கள் டேபிளுக்கு பக்கவாட்டு சுவற்றில் ஒரு பெண்டுலம் வைத்த கடிகாரம். அதைக் கண்டதும் மீண்டும் என் மனம் ரீவைன்ட் செய்யப்பட்டு காலையில் கண்ட கத்தரிப்பூ பெண்டுலத்தையும், அதற்கு முன் சொப்பனத்தில் கண்ட தாலியும் பெண்டுலமென அசை போட்டது. அதற்குள் ஒவ்வொரு சட்னியை தொட்டுக் கொள்ளும் போதும் பிரபுவை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டிருந்த அந்த குங்கமப் பொட்டுக் காரரையும் நான் கவனிக்கத் தவறவில்லை. 

வந்தாயிற்று. பார்த்தாயிற்று. உண்டாயிற்று. பிறகென்ன கிளம்ப வேண்டியது தானே என்பது போன்ற சந்திப்பாக அது இருக்கக் கூடாது என்றிருந்தது அவருக்கென தெளிவாகப் புலப்பட்டது எனக்கு. பிரபுவுக்கு துணையாகச் சென்ற நான் அவருக்கு துணையாகிப் போனது அப்போது தான். 

"ஈவ்னிங்கா திரும்ப போலாமே?" என நான் சொன்னதும் படு ரிலீஃபாக காணப்பட்ட அவர் அதை சட்டென வெளிக் காட்டவில்லை. 

"இல்ல தம்பி.. பரவால்ல.. இப்போ கெளம்புனா தான் கரெக்டா இருக்கும்." என போலியாகச் சொன்னார். 

"இவ்வளவு தூரம் வந்துட்டீங்க.. வாங்களேன் அப்படியே பிரபு வேலை செய்யுற எடத்தலாம் பாத்துட்டு வருவோம்" என நான் சொன்னதும் அதற்காகவே காத்திருந்தவர் போல் புன்னகைத்தார். பிரபுவும் ஒரு சம்பிரதாய புன்னகையை பூத்தான். 

ஸ்டியரிங்கை பிடித்த பத்தாவது நிமிடத்தில் கண்ணாடி பதித்த அந்த அலுவலக கட்டிடத்தை காண்பித்தேன். அதனை ஏறிட்ட அவர்,"தம்பி.. ஆஃபிஸ் உள்ள போய் பார்க்கலாமா?" என வெளிப்படையாகவே கேட்டதில் தன் பெண்ணை மணக்கவிருப்பவன் எத்தகையவன் என தெரிந்து கொள்வதில் ஒரு தந்தையானவர் எவ்வளவு அக்கறையுடன் இருக்கிறார் எனத் தெரிந்தது. அவர் மனவோட்டம் அறிந்திருந்ததாலேயே நான் அவரை அழைத்து வந்திருந்தேன். 

உள்ளே அழைத்துச் சென்றதும் எனக்கும் பிரபுவுக்கும் பொதுவான நண்பர்கள் சிலர் எதிர்ப்பட்டனர். எங்களோடு இருந்த மூன்றாம் நபர் யார் எதற்கு வந்திருப்பார் என அவர்கள் யூகித்திருக்கக் கூடும். வாஞ்சையோடு அவரையும் வரவேற்றனர். நெதர்லான்ட் பேஸ்ட் கம்பெனி என்பதால் அதன் சூழல், வொர்க் கல்ச்சர் என அனைத்தும் வித்தியாசப்படவே பிரமிப்புடன் பார்த்திருந்தார் அவர். அவருக்கு ஒரு ஸ்பேஸ் தேவைப்படக் கூடும் என ரிசப்ஷனிலேயே நின்று கொள்ள, மனிதர் 'பே ஏரியா', 'கஃபேடேரியா' என ஆஃபிஸ் முழுதும் எப்படியோ ஒரு ரவுண்ட் வந்திருந்தார். 

பிரபு யாரிடமோ பேசிக் கொண்டிருக்க, என்னிடம் பேச்சு கொடுத்தார் அவர். நீங்க எங்க இருக்கீங்க, நீங்க எவ்வளவு சேலரி வாங்குறீங்க, என அவர் கேட்ட ஒவ்வொரு 'நீங்க'வும் பிரபுவை குறித்து தான் என எனக்கு தெரியாமலில்லை. நான் சொன்ன பதில்களும் பிரபுவுக்கானதென அவருக்கும் தெரியாமலில்லை. காம்ப்ளீமென்டாக அவரை என் வீட்டிற்கும் அழைத்துச் சென்று அம்மாவிடம் அறிமுகப்படுத்தினேன். 

மீண்டும் அவரை வழியனுப்ப பஸ் ஸ்டாண்ட் வந்தோம். "சரிங்க தம்பி.. ரொம்ப சந்தோஷம்.. வீட்டுக்கு போயிட்டு கால் பண்றேன்" என பிரபுவுடம் விடை பெற்றுக் கொண்டு மகளை பெற்ற அப்பாக்களுக்கே உரிய பெருமிதப் புன்னகையோடு பஸ் ஏறினார். 

பிரபுவின் ரூமை நோக்கி நடந்தோம். "எனக்கென்னமோ ஓ.கே. சொல்லிடுவார்னு தான் தோணுது" பிரபு அதை சொல்லி முடிக்கவும் அவன் மொபைல் அடிக்கவும் சரியாக இருந்தது. அதை அட்டென்ட் செய்த பிரபுவின் புருவங்கள் உயர்ந்து தளர்கையில் மறுமுனையில் யாரென தெரிந்து கொண்டேன். ஓ.கே!! 

மாலையாகியிருந்தது. தெரு முனை டீக்கடையின் காய்ச்சிய பால் வாசனை மழையை வரவேற்கத் தயாராயிருந்த மண் வாசனையோடு பின்னிப் பிணைகையில், என் பைக்கின் ஹெட்லைட் வெளிச்சத்தில் எதிர்ப்பட்டது ஒரு பெண்ணின் முகம். 

அதிகாலைச் சொப்பனம் - கத்தரிப்பூ சுடிதார் - பிரபு - குங்கமப் பொட்டுக் காரர் - எல்லாம் சேர்ந்து எதையோ சொன்னது.. பெண்டுலம்.. க்ளொக்.. டொக்.. க்ளொக்.. டொக்.. 

















No comments:

Post a Comment