Tuesday, 17 January 2017

மூன்றாவது தோசை


மூன்றாவது தோசைக்கு நான் அன்று ஆசை பட்டிருக்கக் கூடாது. இரயில்வே டைமில் என் மூன்று நிமிடங்களை முழுதாகத் தின்ற அந்த மூன்றாவது தோசையால் தான் சற்றே பெரிய இந்தத் துணுக்கினை எழுத வேண்டியதாயிற்று. மூன்று பத்திகளுக்கு மிகாமல் எழுத முயற்சி செய்து தோற்றுப் போனதற்கு அம்மா ஆசை காட்டிய அந்த முறுகலான மூன்றாம் தோசையே காரணம்.

ஷார்ட் பாட்டில் சைலன்சர் பொறுத்தியிருந்த என் புல்லட் பைக்கின் கிக்கரை உதைத்தேன். "டுபுடுபுடுபுடுபூ.... டுபுடுபுடுபு.. டுப்டுபுடுபூடட்.."
எம்டன் குண்டு சத்தத்தைக் கேட்ட என் வீட்டு வாசலில் படுத்துக் கிடந்த காபி கலர் நாயொன்று கேட்ட மாத்திரத்தில் கூட் ரோட்டிற்கு ஓட்டம் பிடிக்க உயிர்ப்பிக்கப்பட்ட புல்லட் பழவந்தாங்கல் இரயில் நிலையம் நோக்கிப் பாய்ந்தது. ஸ்டாண்டில் புல்லட்டை நிறுத்தி நடைமேடை படிக்கட்டுகளில் ஒன்றை தவிர்த்து ஒன்றை மிதித்து ஓடினேன். 

"ஜல்ஸ்க்.. ஜல்ஸ்க்.." தன் வயிற்று பசி போக்க பிச்சைப் பாத்திரத்தில் சில்லறைகளுக்குள் சாதிக் கலவரமூட்டிக் கொண்டிருந்தாள் கடைசிப் படிக்கட்டில் அமர்ந்திருந்த அந்த பழுப்புப் பல் யாசகி.

"பயணிகளின் கனிவான கவனத்திற்கு... வண்டி எண் நான்கு.. பூஜ்யம்.. ஐந்து.. இரண்டு.. மூன்று..  சென்னை பீச்-செங்கல்பட்டு வரை செல்லும் அடுத்த மின் தொடர் வண்டி நடைமேடை இரண்டில் இன்னும் சற்று நேரத்தில் வந்து சேரும்" - பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட்டின் கவரில் இருக்கும் அந்தப் பெண் குழந்தையின் சிநேகிதியானவள் அறிவித்தாள். 

திடீரென்று என் இதயம் ஒரு துடிப்பினை நிறுத்தியிருந்தது. எதற்கென கேட்டதற்கு என் முதல் வகுப்பு சீசன் பாஸ் நேற்றோடு காலாவதியாகிவிட்டதாக பதிலளித்தது. நடைமேடையின் அடுத்த முனையில் இருந்த டிக்கெட் கவுன்டரை நோக்கி நான் மீண்டுமொரு ஓட்டம் எடுத்தேன். நடைமேடை கேன்டீன் வடை வாசம், புத்தகக் கடையின் போஸ்டர் வாசகர்கள், விளக்குமாறால் மண் துடைத்துக் கொண்டிருந்த துப்புரவு ஆயா, தண்டவாளத்தின் ஓரம் துளிர்த்திருந்த சிறு புல்லினை தன் ஆண்குறி பிடித்து அபிஷேகம் செய்து கொண்டிருந்த சிறுவன் ஆகிய அனைத்தையும் ஓடிக் கிடந்து மூச்சிரைக்க கவுன்டர் வந்தடைந்தேன். சிக்னலில் இரண்டு மஞ்சள். தூரத்தில் ரயில் வருவதும் சிறு புள்ளியெனத் தெரிந்தது. அந்த மூன்றாம் தோசையை நொந்து கொண்டேன். நல்லவேளையாக எப்போதும் இலங்கை வரை நீண்டிருக்கும் அந்த நீண்ட வரிசை அன்று இல்லை. அதே வேளையில் முதல் வகுப்பு சீசன் டிக்கெட்டுக்கான 845 ரூபாயும் என்னிடத்தில் இல்லை. ஒரேயொரு வெந்தய நிற புது 500 ரூபாய் மட்டும் பர்ஸில் பல்லிளித்தது. பாழாய்ப் போன டிஜிட்டல் இந்தியாவின் ரயில் நிலையத்தில் ஸ்வைப் மிஷினும் இல்லை. வேறு வழியின்றி மாலை பைக் ஸ்டாண்டிற்கு கொடுக்க வேண்டிய பத்து இரண்டு ரூபாய் நாணயங்களில் ஐந்தை எடுத்து அந்த இருள் படர்ந்த கர்ப்பக்கிரக கவுன்டரில் இருந்த பெண் தெய்வத்திடம் கொடுத்தேன். 

ரயில் வரவும் அந்த பெண் தெய்வம் வரம் தரவும் சரியாக இருந்தது. என்ஜினுக்கு ஒரு பெட்டி பின்னிருந்த பெட்டியில் ஏறி அடுத்த ஒரு மணி நேர ஆட்சிக்கான நாற்காலியைத் தேடி கண்களால் துழாவினேன். மீனம்பாக்கம் வந்த போது ஒரு பயணி ராஜினாமா செய்ய அந்த நாற்காலிக்கு போட்டியின்றி நானே என்னை தேர்வு செய்து அமர்ந்து கொண்டேன். 

"வேருகல்ல பர்பீஈஈஈய்ய்.."
"அஞ்சி பத்துர்பா சம்சேய்ய்.."
தினசரி அலுவல்களுக்காக பயணிகளை சுமக்கும் அதே ரயில் சிலருக்கு தினசரி அலுவலாகவே இருந்தது. புலம் பதிப்பக புத்தகமொன்றை படித்துக் கொண்டிருக்கும் சிகப்பு ஜோல்னா பை மாட்டிய பஞ்சுத் தலை தாத்தா, ஐந்தாறு ஸ்டேஷன்கள் மட்டுமே நீடித்த கிசு கிசு பேசும் பல நூறாண்டு ரயில் சினேகிதங்கள், ஐபாட்களை ஏற்றுக் கொள்ளாது தன் சைனா ஃபோனில் இளையராஜாவே இசையமைத்ததை மறந்த, யாரும் அதிகம் கேட்டிராத பாடலை சவுன்டாக அலறச் செய்யும் சுப்பிரமணியபுரத்து பெல்ஸ் பேன்ட் காரர் என இந்தப் பெட்டியில் இருந்த முகங்களுக்கும் முதல் வகுப்பில் பயணிக்கும் முகங்களுக்கும் நிறையவே வித்தியாசங்கள் இருந்தன. இவர்கள் யாவரும் பெரும்பாலும் முதல் வகுப்புகளில் தென்படுவதில்லை. 

காட்சிபடுத்தப்படும் யாவற்றையும் எழுத்துகளிலும், எழுத்துகளின் ஆழங்களை அழகாக காட்சிபடுத்துதலிலும் உண்டான முரணில் இடப்பக்க ஓரத்தில், கட்ட விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் நடுவில் அமர்ந்து தாளினை முத்தமிடும் பேனாக்களைக் கொன்று, ஸ்மார்ட் ஃபோன்களில் கட்ட விரலால் தட்டெழுத முயலும் என்னைப் போன்ற முதல் வகுப்பு பயணிகள் எவ்வளவு தருணங்களை இழக்கிறோம் என அப்போது அறிந்தேன். 

பொத்தேரி வந்த போது நான் பயணித்த பெட்டியில் அர்த்தநாரிகள் இருவர் ஏறினர். 

"தட்.. தட்.." இரு கைகளுக்கும் நடுவில் அவமானங்கள் பல தாங்கிய அவர்களின் வாழ்வோசை கேட்டது. கை நீட்டி யாசகம் கேட்கும் யாசகர்களை ஏளனமாகப் பார்க்கும் சிலர் கை தட்டி யாசகம் கேட்ட அவர்களை கண்டும் காணாதது போல் சன்னல் கம்பிகளின் வெளியே கடந்து சென்ற மின் கோபுரங்களை எண்ணிக் கொண்டிருந்தனர். 

"ஹெல்ப் பண்ணுங்க சார்" - என் தோள் தொட்டாள் அந்த அர்த்தநாரிகளுள் ஒருவள். அந்தத் தொடுதலில் அவளுக்கு ஒரு நம்பிக்கை ஆட்கொண்டிருந்தது. கோபுரங்களை எண்ண முடியாது சட்டை பாக்கெட்டில் துழாவி கையில் சிக்கிய சில்லறையை எடுத்து அவள் கைகளில் திணித்தேன். அந்த நம்பிக்கை இப்போது ஆசியாக என் தலை மீது மாறியிருந்தது. இம்முறை நான் மூன்றாவது தோசையை நொந்து கொள்ளவில்லை.

-சுர்ஜித் குமார்




No comments:

Post a Comment