Saturday, 14 January 2017

கூழாங்கல்


 
வீரவநல்லூர்
3 கி .மீ 


துரு பிடித்த பழைய வழி காட்டிப் பலகையை ஒட்டித் திரும்பிய வளைவுச் சாலையில் நின்றது அந்தப் பேருந்து. திருப்பத்தில் இருந்து பிரியும் ஒரே ஊர் வீரவநல்லூர் என்பதால் அந்த ஊர் மக்கள், நிறுத்தத்திலிருந்து 3 கி.மீ நடந்து தான் செல்ல வேண்டும். துரு பிடித்த பலகைக்கு பாட்டன் முறையாக அமைந்த அந்தப் பேருந்தில் இருந்து இறங்கினான் வீராமுதன். 

ஏழாம் வகுப்பு இறுதித் தேர்வினை எழுதிக் கொண்டிருக்கும் போதே அவன் மனம் விடுமுறையை நினைத்து அசை போடத் துவங்கியிருந்தது. வேறெங்கு செல்வது காட்டிலும், பாட்டி வீட்டினில் கோடை விடுமுறையை கழிப்பதில் தான் அவனுக்கு மிகுந்த ஆர்வம். சிம்ம சொப்பனமாக இருந்த கடைசி நாள்  கணக்கு பாடத் தேர்வினை எழுதி விட்டு அன்று பிற்பகலே தன் தாயுடன் ஊருக்கு கிளம்பி வந்திருந்தான். மூன்று தெருவுக்கு அப்பால் இருக்கும் 

பள்ளிக்குச் செல்ல மிதி வண்டி கேட்டு அழுத வீராமுதன், தாத்தா பாட்டியினைக் காண பேருந்து நிறுத்தத்திலிருந்து மூன்று கி.மீ. நடந்து செல்வதை பொருட்டாகவே எண்ணவில்லை. 

சென்ற பொங்கலுக்கு வந்த போது தார் சாலையாக பளபளத்த கிராம சாலை, சமீபத்தில் பெய்த மழைக்கு பலியாகி பல்லிளித்தது. ஆனால் பாதையின் இரு மருங்கிலும் கொஞ்சிய இயற்கை அதனை மறக்கடித்தது. ஈச்சம் பழ மரங்கள், அதனை ஒட்டி அமைந்த வயல் வெளிகள், தூக்கணாங் குருவிகள், மழை வருமா என ஆருடம் சொல்லும் தும்பிப் பூச்சிகள், மாலைச் சூரியன் வண்ணம் தீட்டிய செவ்வானம் என ஒவ்வொன்றையும் ரசித்த படியே நடக்கலானான்.
"வாம் மா.. எப்டி இருக்க? பிரயாணம் லாம் சௌரியம் தானே... மாப்ள எப்ப வர்றார்?" என அன்போடு வினவியபடியே உள்வாசலில் இருந்து மகளை வரவேற்றார் நல்லசிவம். 

"நல்லாயிருக்கேன்பா.. அடுத்த வாரம் லீவு சொல்லிட்டு வர்றேனுருக்கார்.. நீங்க எப்டி பா இருக்கீங்க? அம்மா எங்க?" எனக் கேட்டவாறே கண்களை மேய விட்டாள் சுமதி. இரண்டு நாட்களுக்கு முன்பே வந்திருந்த தனது அக்கா, தங்கையைக் கண்டதும் புன்னகைத்து அவர்களைக் கட்டிக் கொண்டாள். பையை வாங்கி உள்ளறையில் வைத்து பின்புற தோட்டத்திற்கு அம்மாவைக் காண அழைத்துச் சென்றாள் பத்மா, சுமதியின் மூத்த சகோதரி. 

நல்லசிவம் - விசாலாட்சி தம்பதியினருக்கு நான்கு மகள் மற்றும் ஒரே மகன். நான்கு பெண்களையும் நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்த பெருமை தம்பதியினரைச் சாரும். இரண்டு பெண்களுக்கு அடுத்து பிறந்த மகன் ஆனந்தன் புதிதாக திருமணமான கடைசி தங்கையை அழைத்து வர டவுனுக்குச் சென்றிருந்தான். இன்னுமோர் தங்கை மறுநாள் வரவிருப்பதாக இருந்தமையால் வீடே கல கலவென இருந்தது.

"வாடி சுமதி.. இப்ப தான் இளையவ கடைசி பஸ்ஸ புடிக்க முடியாதுனு டவுன்ல இருந்து போன் பண்ணா.. ஆனந்தன் கூட்டி வர போயிருக்கான். பசங்க பரீட்சலாம் எப்டி எழுதி இருக்காங்க? வீரா எங்க?" என ஆட்டுக்கல்லில் மாவரைத்தபடியே வினவினார் விசாலாட்சி.   

வாசலில் தனது தாத்தாவை அணைத்தவாறே, செல்ல நாய் சீசர் தன் மீது பாய்ந்து நக்கியதை ஏற்றுக் கொண்டான் வீராமுதன். தன் பங்குக்கு வரவேற்ற சீசருக்கு ஒரு செல்ல தடவுதலைக் கொடுத்து பாட்டியைக் காண தோட்டத்திற்கு ஓடினான். பெரியம்மா, சித்தி மற்றும் பாட்டியின் உபசரிப்பிற்குப் பின் கிராமத்தில் தன் அண்டை வீட்டு சிநேகிதனான மணியைக் காணச் சென்றான். மணியும் அவனுக்கு உறவே.. அவனோடு சேர்ந்து தன் பெரியம்மா மகன் ஜெகனும் விளையாடிக் கொண்டிருந்தான். இருவர் கூட்டணி இப்போது மூவர் கூட்டணியாயிற்று. 

மாலை நேரமானதால் மேய்ந்து கொண்டிருந்த நாட்டுக் கோழிகளைப் பிடித்து கூடையில் அடைத்தார் பாட்டி. அதற்குள் ஆனந்தன் மாமா கடைசி சித்தியை அழைத்து வந்திருந்தார். மாடுகளைக் கட்டியபடியே தன் மருமகன் வீராவை நலம் விசாரித்தார். தனது தந்தைக்குப் பிறகு விவசாயம் பார்க்கவே விரும்பி அதனை செய்து வந்தார் ஆனந்தன். 

அன்று வெள்ளிக்கிழமை என்பதால் தொலைக்காட்சியில் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சி ஒளிபரப்பலானது. அந்த கிராமத்திலேயே நல்லசிவம் வீட்டில் தான் தொலைக்காட்சி இருந்தமையால் ஊரார் சிலர் வயலும் வாழ்வும் பார்த்த பின்னர் ஒலியும் ஒளியிலும் மூழ்கினர். கதவுகள் வைத்து பலகையினால் பொட்டி போன்று அமைத்து அதனுள் இருந்த பழைய சாலிடர் தொலைக்காட்சியில் ஈஸ்ட்மென் கலரில் அனைவரும் பார்க்கலாயினர். ஒரு சிலர் வீட்டிற்கு வெளியில் நின்றபடி சன்னல் கம்பிகளூடே பார்த்து ரசித்தனர். தொலைக்காட்சியை இயக்கும் பொறுப்பு வீராவிற்கு. அதில் ஒரு பெருமிதம் அவனுக்கு. நிகழ்ச்சி முடிந்த பின்னர் தத்தம் அவர்கள் வீட்டிற்குச் செல்ல, நல்லசிவம் நீண்ட நாட்களுக்குப் பின்னர் மகள்களுடன் சேர்ந்து இரவு உணவினை உண்டார். உரையாடல்கள் பெரும்பாலும் பிள்ளைகள் படிப்பு பற்றியே இருந்தது. இரவு உணவுக்குப்பின் வீட்டு வாசலில் பெரிதாக கருங்கல்லால் ஆன திண்ணை மேல் மகள்கள் மற்றும் விசாலாட்சி குடும்பக் கதைகள் அளக்க நல்லசிவம் கயிற்றுக் கட்டிலில் கண்ணயர்ந்தார். ஆனந்தன் கரும்பு தோட்டத்திற்கு காவலுக்குச் சென்றார். உடன் செல்ல நாய் சீசரும் சென்றது. வீரா, மணி, ஜெகன் மற்றும் சில வாண்டுகள் சேர்ந்து வீட்டின் முன்புறம் இருந்த பெரிய திடலில் நிக்கல் குந்தல், ஓடிப் பிடித்தல் என விளையாடிக் கொண்டிருந்தனர். கிராமத்தில் சீக்கிரமே உறங்கும் பழக்கம் இருந்ததால் வேறு வழியின்றி சிறுவர்கள் படுக்கச் சென்றனர். தான் வழக்கமாக டியூஷன் முடித்து வரும் நேரம் அது வீராவிற்கு. அதனால் முதலில் சற்று புரண்டு படுத்தவன் சீக்கிரமே கிராமியத் தென்றலின் வருடலில் தூங்கலானான். 

பொழுது புலர்ந்து, சேவல் கூவியது.. கண் விழித்து பார்த்த வீராவின் எதிரில் பாட்டி சாணம் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருப்பது மங்கலாக தெரிந்தது. அம்மா, சித்திகள் மற்றும் பெரியம்மா தத்தம் தங்களது பணிகளில் மும்முரமாக இருந்தனர். காவலுக்குச் சென்றிருந்த ஆனந்தன் மாமாவும் வீடு திரும்பி இருந்தார். காலைக்கடனுக்கு சவுக்குத் தோப்புக்குச் செல்ல மணி மற்றும் ஜெகனுடன் செல்ல ஆயத்தமானான் வீரா. வீட்டிற்கு வந்ததும் எண்ணெய் தேய்த்து விட்டார் பாட்டி. வெந்நீரில் நன்கு குளித்து புத்துணர்ச்சியாக இருந்த வீராவிற்கு அவன் விரும்பிய கேழ்வரகு கூழ் பாட்டியால் வழங்கப்பட்டது.  

"தேங்க்ஸ் பாட்டி.." எனக் கூறி ஒரே மடக்கில் கூழை பதம் பார்த்த வீரா, கூட்டாளிகளுடன் வயலில் இருக்கும் களத்து மேட்டிற்குச் சென்றான். தென்னை மட்டை கொண்டு தாத்தா செய்து கொடுத்த கிரிக்கெட் மட்டையில் விளையாடினர் சிறுவர்கள். பந்து மணியின் சொத்து. சிறிது நேரம் கழித்து கிணற்றில் ஆரவாரமாகக் குதித்து நீச்சல் அடித்தனர். சென்ற வருட விடுமுறைக்கு வந்த பொழுது தாத்தாவும், மணியின் அப்பாவும் கயிறு கட்டி அவனுக்கு நீச்சல் பழகி இருந்தனர். பின்னர் மதிய உணவுக்கு வீட்டிற்குச் சென்ற வீரா தன் பெரிய சித்தி மற்றும் அவரது பெண் குழந்தையைக் கண்டு குதூகலமானான். தனக்கு தென்னை மட்டை கிரிக்கெட் மட்டை செய்து கொடுத்தது போலவே தங்கைக்கும் இலவம் பஞ்சினால் பொம்மை செய்து கொடுத்து அதற்கு தூளியும் கட்டிக் கொடுத்தார். தாத்தாவின் கருமித்தனம் என அதனைச் சொல்லலாகாது, மாறாக அவரது கைவினை எனக் கூறலாம். அப்படித்தான் வீராவும் அதனை ஏற்றுக் கொண்டான். பேரப்பிள்ளைகள் ஆசைப்பட்டவை அனைத்தையும் செய்யலானார் நல்லசிவம். நுங்கு வெட்டிக் கொடுப்பது, இளநீர் இறக்குவது என ஒரு பக்கம் தாத்தா அன்பு பொழிய, நாட்டுக்  கோழி முட்டை, தட்டடை, அதிரசம் என பாட்டி அசத்த தனது டிராக்டர் வண்டியில் ஏற்றி வயலில் சேடை ஓட்டுவது, திருவிழாவிற்கு அழைத்து சென்று இராக்கூத்து காண்பது, தள்ளு வண்டியில் வரும் பால் ஐஸ், சேமியா ஐஸ் என வாங்கித்தருவது என ஆனந்தன் மாமாவும் தன் பங்கைக் காட்டினார். பெரியவர்களும் தாயம், சீட்டு என பொழுது போக்குக்காக சில விளையாட்டுகளுடன் பொழுதைக் கழித்தனர். அவ்வப்போது வந்த மருமகன்களும் சிறப்பாக கவனிக்கப்பட்டனர்.

இப்படியாகக் கழிந்த வீராவின் விடுமுறை முடிவுக்கு வந்தது. 

"பள்ளூடம் தொறக்க இன்னும் நாலு நாளு இருக்கே.. அதுக்குள்ள என்ன அவசரம்?.. பொறுமையா போலாம்ல..?" அக்கறையோடு சுமதியைக் கேட்டார் விசாலாட்சி.

"இல்லம்மா இப்ப போனாத்தான் கரக்டா இருக்கும்..  யூனிபார்ம் வாங்கி தைக்க கொடுக்கணும், ஸ்கூல்ல போயி புக்ஸ் லாம் வாங்கி அட்டை போடணும். அதுவும் இல்லாம ஒரு மாசமா நல்ல சாப்பாடு சாப்ட்டுருக்க மாட்டார். அவரையும் கவனிக்கணும்ல..?" துணிகளை மடித்து பையில் அடுக்கியவாறே பதில் அளித்தார் சுமதி. 

"மறுபடியும் காலாண்டு லீவ்ல வரேன் மா.." - சுமதி.
"கும்பலா இருந்துட்டு இப்போ திடீர்னு கெளம்பி போனீங்கன்னா வீடே வெறிச்சோனு இருக்கும்.. பத்மாவும் நாளைக்கே கிளம்புறா.." - வருத்தம் தோய்ந்த முகத்துடன் கூறிய அம்மாவைச் சமாதானப் படுத்தினார் சுமதி.

"காலையில அஞ்சு மணிக்கு மெட்ராஸ் பஸ் இருக்கு. ரெண்டு மணி நேரத்துல போயிடலாம்.. எல்லாம் எடுத்து வெச்சுக்கிட்டியா?" என தம்பி ஆனந்தன் கேட்டதற்கு தலையை ஆட்டிய படியே, "வீரா...." என அழைத்தார் சுமதி. 

சீசரை வருடியபடியே சோகத்துடன், "வரேன் மா.." என பதிலளித்தான். சீசரும் ஏனோ சோகமாக இருந்தது. 

"உன் லக்கேஜ் லாம் எடுத்து வை... நாளைக்கு நாலு மணிக்கு எந்திரிக்கணும்." - அக்கறையின் மிகுதியில் சுமதி சொல்ல, தன் பொருட்களை சரி பார்த்து எடுத்து வைத்தான் வீரா.

விடியற்காலை - தாத்தா பாட்டி கால்களில் விழுந்து ஆசி பெற்றான் வீரா. அவனை அரவணைத்து, கட்டி தழுவி நூறு ருபாய் கொடுத்தனர்.

"வேண்டாம் தாத்தா..."

"வீரா.. தாத்தா தந்தா வேண்டாம்னு சொல்லக் கூடாது.. சேத்து வெச்சு உனக்கு புடிச்சத வாங்கிக்கோ.."

கண்ணீரும் புன்னகையும் சேர்ந்தவாறு அதைப் பெற்றுக் கொண்டான் வீரா. என்றைக்கும் தாமதமாக வரும் மெட்ராஸ் பேருந்து அன்று, ஓட்டுனரின் தொழில் பக்தி மிகுதியால் சரியாக ஐந்து மணிக்கு வந்தது. வீராவிடம் ஒரு வினோத பழக்கம் இருந்தது. அதாவது, அவன் விடுமுறை முடிந்து சென்னைக்குச் செல்லும் பொழுதெல்லாம், வீரவநல்லூர் ஞாபகமாக எதையாவது எடுத்துச் செல்வது. சென்ற முறை தொட்டாச்சிணுங்கி இலை, மாந்தோப்பில் கிடந்த காய்ந்த சருகு என ஏதாவது. பள்ளிக்குச் செல்லும் போது தன் பென்சில் பாக்ஸில் அதனை எடுத்துச் செல்வான். தனக்குப் பிடிக்காத கணக்குப் பாடம் நடக்கையில் அதனைப் பார்த்து தன் விடுமுறை நாட்களை நினைவு கூர்ந்து கனவு காண்பான். இம்முறை அவன் எடுத்துச் செல்வது கூழாங்கல். 

நல்லசிவம் தம்பதியினருக்கு பேரனை பிரிய மனமில்லாமல் சற்று கலங்கினர். சில நேரங்கள் கடைசி நொடியில் பயணம் இரத்தாகும். கடைசி நேரத்தில் பேருந்து வராது, முக்கியமான பொருளை சுமதி மறந்திருப்பார். பாட்டியின் கண்ணீரைப் பார்த்து சுமதி மனம் மாறியதும் உண்டு. ஆனால் இம்முறை ஏனோ அதெல்லாம் நடைபெறவில்லை. பேருந்தில் ஏறிய வீரா, சுமதி இருவரும் கையசைத்து விடை பெற்றனர். இரும்பு கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் செய்யப்பட்ட பேருந்து, இருக்கைகள் சனல் கயிற்றால் கட்டப்பட்டு பரிதாபமாக காட்சி அளித்தது. வீராவுடன் சேர்ந்து அதுவும் வீறிட்டு அழுதபடியே சென்னை நோக்கிச் சென்றது.

அநேகமாக அது தான் வீரா கடைசியாக வீரவநல்லூரில் கழித்த நீண்ட விடுமுறை. அதற்குப் பன் ஆனந்தன் திருமணம், பாட்டி, தாத்தாவின் மரணங்கள் என காலங்கள் உருண்டோடின.

வீராமுதன் பொறியியல் வல்லுனராக தேர்ச்சிப் பெற்று வெளிநாடில் வேலை செய்யும் வாய்ப்பும் கிட்டியது. ஒரு மாத விடுமுறையில் இந்தியா வந்திருந்தான் வீரா, தன் மனைவி மற்றும் நான்கு வயது மகள் சாராவுடன். ஆம் அவனுக்கு திருமணம் ஆகியிருந்தது. 

"அப்பா.. ஒரு வாட்டி வீரவநல்லூர் போய் வருவோமா..?" - வீரா தன் அப்பா வாசுதேவனிடம் கேட்டான்.

"அங்க இப்ப யாருமே இல்லியேப்பா.. பாட்டி தாத்தாக்கு அப்புறம் ஆனந்தனால அங்க அவன் பொண்டாட்டி, புள்ளைகளோட தனியா இருக்க முடில. அவனும் புள்ளைங்க படிப்ப பாக்கணும்ல, அதான் டவுன் பக்கம் வந்து செட்டில் ஆயிட்டான்." - அப்பா சொல்லச் சொல்ல அதிர்ச்சியாக இருந்தது வீராவிற்கு.

"ஆமாப்பா.. அப்பா சொல்றது நிஜம் தான்.. நிஜம்னு சொல்றத விட எதார்த்தம்னு சொல்லலாம். விவசாயம் முன்ன மாறி இல்ல. அதனால கொஞ்ச நிலத்துல பருவத்துக்கு ஏத்த மாறி கரும்பு, மலாட்டனு போட்டு விவசாயத்த தக்க வெச்சுட்டு வரான். இப்ப அவன் ரியல் எஸ்டேட் பண்றான் பா.. அதுல கணிசமான தொகை கிடைக்குதாம். எங்க பேர்ல இருந்த விவசாய நிலங்களையும் உன் பேருக்கு பிளாட்டா மாத்த சொல்லிட்டோம்." - பேத்தி சாராவுக்கு உணவூட்டிய படியே சுமதி சொல்லி முடித்தார்.


"நம்ம வீடு என்னாச்சு மா..?"

"வீடு அப்படியே தான் இருக்கு. தாத்தா, பாட்டி தவசம், ஊர் கோயில் கும்பாபிஷேகம்னா எப்பவாச்சு போய்ட்டு வருவோம். கடைசியா ஆனந்தன் பொண்ணு சமஞ்சதுக்கு அங்க தான் புட்டு சுத்தப் போனோம். முனீஸ்வரனுக்கு கிடா வெட்டி பொங்க வச்சு வந்தோம்."

தன் மாமாவின் தொழில் மாற்றம் குறித்து, ஏற்கனவே ஓரளவு தாய் தந்தையுடனான ஸ்கைப் (skype) உரையாடல் போது தெரிந்து வைத்திருந்த வீரா, பள்ளிக் காலங்களில் தனக்கு சொர்க்க பூமியாக விளங்கிய வீரவநல்லூர் பாட்டி வீடு பற்றி சுமதி சொன்னதும் கலங்கினான். உடனே அங்கு போக வேண்டும் என தோன்றியது அவனுக்கு. 

மறுநாள் தை பொங்கல். தாத்தா பாட்டி வாழ்ந்த அந்த வீட்டில் பொங்கல் வைத்து வழிபட விரும்பி காலையே அனைவருடனும் காரில் புறப்பட்டான்.

அதே வளைவுச் சாலை வழிகாட்டிப் பலகை அவனை வரவேற்றது. ஆனால் இம்முறை பிரம்மாண்டமான விளம்பர வளைவு. 

"சென்னைக்கு மிக மிக அருகில் வீரவநல்லூர் - சதுர அடி 100/- மட்டுமே" என்ற விளம்பர பதாகையில் போலியாகச் சிரித்தாள் ஒரு விளம்பர நடிகை.
இம்முறை ஈச்சம்பழ மரங்கள் இல்லை, தும்பி பூச்சிகள் இல்லை, தூக்கணாங் குருவிகள் இல்லை. அவை அனைத்தும் லே அவுட்டாகவும், கேட்டட் கம்யூனிட்டியாகவும் மாறி இருந்தது. கனத்த இதயத்துடன் வீட்டை நோக்கி காரை விரட்டினான் வீரா.

பசுங்கன்று ஒன்றிற்கு தண்ணீர் காட்டிக் கொண்டிருந்த மணியின் தாயார் வரவேற்றார்.

"எப்டி இருக்கீங்க பெரியம்மா..? மணி என்ன பண்றான்?" 

"நல்ல இருக்கேன்பா.. மணி திருப்பூர்ல பனியன் கம்பெனில இருக்கான். மாசம் ஒரு வாட்டி வருவான். இந்தாட்டி பெரும் பொங்கலுக்கு மட்டும் தான் லீவாம். சேந்தாப்புல லீவு கெடக்கலனு வர்ல. நேத்து தான் நீங்களாம் பந்து விளாண்ட மாறி இருக்கு. அதுக்குள்ள நெடு நெடுன்னு வளந்துட்டிங்க.." - கிராமிய பேச்சு வாடையுடன் மணியின் தாய் உபசரித்தார். 

தன் மனைவி மற்றும் மகளை அறிமுகம் செய்து மணி வீட்டில் இருந்த சாவியை வாங்கி  தன் பாட்டி வீட்டிற்குச் சென்றான். பெரிய இரும்பு சாவி அது. திறந்து உள்ளே சென்றான். சிலந்தி வலை பின்னல்களுக்கு மத்தியில் தனது தாத்தா, பாட்டியின் உருவப்படங்கள் அவனை பார்த்து மெல்லச் சிரித்தது. எலிகளும், வவ்வால்களும் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தன. பின்வாசலுக்குச் சென்றான். ஆட்டு உரலில் ஈரம் பட்டு பல ஆண்டுகள் ஆகி இருந்தது. தாத்தாவின் கயிற்றுக் கட்டில் ஒரு கால் முறிந்தபடி சுண்ணாம்புச் சுவரில் சாய்த்து வைக்கப் பட்டிருந்தது. 

அதை எடுத்துப் போட்டு, மாறாமல் இருந்த வேப்ப மர நிழலில் சற்று நேரம் படுத்தான். தூங்கிப் போன வீரா, மணியின் தாயார் கருப்பட்டி காப்பியுடன் எழுப்பியதில் விழித்தான். காப்பியை ருசித்தபடியே, "பெரியம்மா.. பக்கத்துல ஆள் யாராச்சு இருந்தா வர சொல்லுங்களேன்.. வீட்ட சுத்தம் பண்ணி பொங்க வெக்கணும்."

சற்று நேரத்தில் பெரியம்மா அனுப்பிய ஆளின் உதவியால் வீட்டை நன்கு சுத்தம் செய்து, தாத்தா பாட்டி உருவப்படங்களுக்கு பொட்டு வைத்து, விளக்கேற்றி பொங்கல் வைத்து வழிபட்டான். சற்று நேரம் மணி வீட்டில் பேசிவிட்டு விடை பெற்றான் வீரா. சென்னையில் உறவினர் அனைவரையும் சந்தித்து அவர்கள் உபசரிப்பினைப் பெற்று வெளிநாட்டிற்கு புறப்பட விமான நிலையம் வந்தடைந்தான் வீரா.

பின்னிரவு வேலை -
சென்னை பன்னாட்டு விமான நிலையம்
சர்வதேச முனையத்தின் பார்வையாளர் வளாகத்தில், விடுமுறை முடிந்து ஊருக்குச் செல்லவிருந்த தங்களது மகன், மருமகள் மற்றும் சாராவை வழியனுப்ப வந்திருந்தார்கள் வாசுதேவன்-சுமதி தம்பதியினர். தடுப்பு வேலியின் மேல் அமர்ந்திருந்த பேத்தி அன்பு முத்தங்களால் தனது தாத்தாவின் கன்னங்களை எச்சில் செய்து அவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்திக் கொண்டிருந்தாள். வீரா Cathay Pacific ('கேத்தே பசிஃபிக்' ஹாங்காங் மார்க்கமாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லக் கூடிய விமான சேவை) என அச்சடிக்கப்பட்டிருந்த விமானமேறும் சீட்டினை (boarding pass) நிரப்பிக் கொண்டிருந்தான். மருமகளின் கைகளைப் பற்றிக் கொண்டு சில வாழ்வியல் நுணுக்கங்களை கூறிக் கொண்டிருந்தார் சுமதி. அப்போது குடிவரவு சோதனைக்குத் (immigration check) தயாராகும்படி அறிவிப்பு வந்தவுடன் வீரா விடை பெற எத்தனித்தான். அன்று ஒரு நாள் விடியற்காலை நல்லசிவம்-விசாலாட்சி போலவே, வாசுதேவன்-சுமதி தம்பதியினர் முகங்களிலும்  கவலை ரேகைகள் படர ஆரம்பித்தது. உணர்ச்சிப் பெருக்கில் பீறிட்டு வரும் கண்ணீரை அடக்க நினைத்துத் தோற்கிறார் சுமதி. மனைவியைத் தேற்ற மகனைப் பிரியும் தனது துக்கத்தை வெளிக் கொணராமல், மகனின் முதுகைத் தடவிக் கொண்டே புன்னகைப்பதில் நாகேஷ் நடிப்பை மிஞ்சுகிறார் வாசுதேவன்.
பெற்றோரைப் பிரிய மனமில்லாமல் தனது இரு கரங்களாலும் அவர்களை ஒரு சேர இறுக அணைத்துக் கொள்கிறான் வீரா. "ஆன்ட்டி.. அழாதீங்க.. சீக்கிரமா அடுத்த லீவுக்கு வரோம்.." என தேற்றினார் மருமகள். மீண்டும் ஒரு அணைப்புக்குப் பிறகு கையசைத்துக் கொண்டே தத்தம் தங்களது தள்ளு வண்டியை (trolley) தள்ளிக் கொண்டு
பயணிகளுக்கு நடுவில் ஒரு புள்ளியாய் மறைந்தனர் வீரா குடும்பத்தார் . தடுப்பு வேலியின் மீது தலையைச் சாய்த்து இறுக்கமான முகத்துடன், நிலை குத்திய பார்வையுடன் தனது மருமகள் கூறிய அறிவிக்கப்படாத அடுத்த விடுமுறையப் பற்றி அசை போடத் துவங்கியது அந்த தாயுள்ளம்!!

அச்சமயம் விமானத்தில் அப்பா தனக்கு வீரவநல்லூரில் கொடுத்த சிறிய கூழாங்கல்லை பையில் இருந்து எடுத்து தரும்படி கேட்டாள் சாரா. பெரிதாக ஆபத்து விளைவிக்க கூடிய பொருளாக அது இல்லாததால் குடியுரிமை அதிகாரிகள் மறுக்கவில்லை. சென்னையில் தன் வீட்டினில் இத்தனை ஆண்டு காலம் அதனை பொக்கிஷமாக பராமரித்து வந்த வீரா அதை சாராவுக்கு கொடுக்கலானான்.
"ஹவ் திஸ் பெப்பிள் இஸ் மேட் டாட்?" - ஆங்கிலத்தில் கேட்ட மகளுக்கு தாய்மொழியாம் தமிழில் விளக்கினான் வீரா.
"ஒரு பெரிய மலையில பாறையா இருந்த இந்த கல்லு பல வருஷம்  மழை காலத்துல உருண்டு வந்து பல செடி, மரங்களுக்கு நடுல சிக்கி, வெயில்ல வதங்கி, திரும்ப மழைல நெனஞ்சி எல்லா பருவ காலத்தையும் பாத்து, அதனோட கரடு முரடான நிலைல இருந்து மாறி வழவழப்பா இப்டி கூழாங்கல் ஆகுது. நம்மளும் அப்டி தான்.. இந்த பெப்பிள் மாறி வழவழப்பா மாறணும் னா வாழ்க்கைல எல்லா இன்ப துன்பத்தையும் கடந்து வரணும்."  என்று பொறுப்பு மிகுதியில் பேச குழந்தை சாரா எல்லாம் புரிந்தவளாக தலை ஆட்டினாள். அவளுக்கு இருக்கை அரைக்கச்சு (seat belt) மாட்டி விட்டு நெற்றியில் முத்தம் பதித்தான் வீரா. சாராவின் பிஞ்சு கைகளில் இருந்த கூழாங்கல்லில் மண்வாசனை வற்றிப் போயிருந்தது.


-சுர்ஜித் குமார்
                                                     

2 comments:

  1. அழகான படைப்பு, இதில் இருந்த வரிகள் எல்லாம் வீரவநல்லூருக்கு என்னை அழைத்து சென்றதை போல் உள்ளது...❤️

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர் ❤❤

      Delete