Tuesday, 10 January 2017

யாதெனப்படுவது அரசியல்?

நாலு ரோடு சந்திப்புல.. முக்கால் அடி உசரத்துல.. பத்துக்கு பத்து மேடையில.. ரெண்டு கரை வேட்டி கட்டி.. அஞ்சு பக்க அறிக்கயின.. எதுக மோன நடையில.. நீட்டி முழக்கி பேசுவதே அரசியல் என்றானது நான் கண்ட அரசியல் தலைமுறை. 

உண்மையில் அரசியல் என்பது என்ன? அதன் கட்டமைப்பு எவ்வளவு எளிமையாயிருத்தல் வேண்டும்? சாமான்ய மக்கள் நோக்கும் அரசியல், கட்டமைக்கப் பட்டிருக்கும் அரசியலில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது? 

அரசியல் பற்றின தெரிவு அதன் சொல்லிலேயே உருவகப்பட்டுள்ளது. 

"அரசு + இயல் = அரசியல்" 

இயல்பாக இயன்று கொண்டிருக்கும் ஒரு இனத்தின் வாழ்வியல் முறையை அதன் மேம்பாட்டிற்காக முன்னோக்கி நகர்த்திச் செல்ல மரபுகளால் வரையறுக்கப் பட்டிருக்கும் ஒரு வண்டிச் சக்கரமே அரசு. அதன் அச்சாணியே அது சார்ந்த கொள்கைகள் எனக் கொள்வோம். எனில் வண்டியினை செலுத்தும் வண்டிக்காரன் யார், அவன் கையில் எடுத்திருக்கும் சாட்டையினை வடிவமைத்தவன் யார், அவன் கொடுக்கப் போகும் கசயடியினை வாங்கி, வண்டி இழுக்கப் போவது உண்மையில் குதிரை தானா அல்லது பொதி சுமக்கும் கழுதையா என்பதை கண்டறிவதில் தான் ஒளிந்திருக்கிறது நுட்பமான அரசியல். 

இங்கு தேசிய கட்சிகளின் சித்தாந்தங்களும் கொள்கைகளும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுவதால் தான் ஒரே நாட்டிலே இருந்தாலும் அண்டை மாநிலத்திரோடு வெறுப்புகளை உமிழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அரசை வியாபாரிகளும் செல்வந்தர்களும் இயக்குவதால் தான் அரசியல்வாதி என்றுமே தலை நிமிர முடிவதில்லை. ஏன் இந்த நிலை? இந்த கூற்றுக்கு பதில் கிடைக்குமாயின் வண்டிக்காரன், சாட்டை செய்தவன், வண்டி இழுப்பது குதிரையா அல்லது கழுதையா என்பதற்கும் பதில் கிடைத்து விடும்.

ஆரோக்கியமான அரசியல் என்பது உண்மையில் சார்பற்று இருக்க வேண்டுமென்பது எனது ஒத்த கருத்து. இந்திய அரசியலை பொறுத்த மட்டில் வீதிக்கொரு கட்சி சாதிக்கொரு இயக்கம் என பிரித்தாளப்படுவதால் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.. இங்கு இல்லாமை என்றொரு நிலை வேண்டும் என்பது வெறும் கொள்கையளவிலே நீர்த்து போய் விடும் என்பதில் ஐயப்பாடே இல்லை. சமூக அரசியல், சமுதாய அரசியல், சாதி அரசியல், மதவாத அரசியல் இது எதுவுமே பிரிவுற்றே கிடக்குமேயானால் இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனாலும் மக்கள் மேம்படப் போவதில்லை. மாறாக அதன் தலைவர்களின் வெற்று வாதங்களும் வீண் ஜம்ப கொள்கைகளும் பின்னாளில் வரலாறு பாடத்தில் மதிப்பெண்களுக்காக மாணவர்களால் மனப்பாடம் செய்ய வேண்டிய நிலை வேண்டுமாயின் வரும். இந்நிலை களைய அரசியலும் அது சார் சட்டங்களும் ஒரே நேர் கோட்டில் பயணிக்க வேண்டும். சட்டத்தில் இருக்கும் ஓட்டை உடைசல் சந்து பொந்துகளை அடைத்து புனல் வழி தீர்வுகள் காண வேண்டும்.

இங்கு வரலாறு ஆனவர்கள் பலர். அண்ணல் அம்பேத்கர் போன்றொரு இனக்காவலரை பார்க்க இயலுமா? கர்மவீரர் காமராஜரைப் போன்று தன்னலம் அறியாத தலைவரைத் தான் காண இயலுமா? சாதிக்கொரு தலைவர் என கண்டறியப்படுவதற்கு அரசியல் செய்ய வந்தவர்களல்லர் அவர்கள். அனைத்து சமுதாய மக்களும் ஒருமித்த வளர்ச்சி கொண்டிருக்க வேண்டும் என்பதில் ஏக கருத்துடையோர்களாகவே வாழ்ந்து மறைந்தனர். இன்று அதனையே பாகுபடுத்தி போஸ்டர்களில் உறுமும் சிறுத்தைகளாகவும் சீறும் சிங்கங்களாகவும் தத்தம் தங்களது சாதிக்கொரு அடையாளம் காட்ட முனையும் அரசியல் வெறுக்கத்தக்கது. வரலாறாக முனையும் இந்த கிளை அரசியலமைப்பு தலைவர்கள் எங்கள் வரலாற்று நாயகர்களை அடையாளம் காட்டும் வரலாற்று ஆசிரியர்களாக இருந்தாலே போதுமானது. வருங்காலத்தில் உங்களை பின்பற்றவிருக்கும் மாணவ சமுதாயம் சீர்மிகு அரசியலை முன்னெடுக்கும். சரியான நேர் கொண்ட வழிகாட்டுதல் ஒன்றே நாளைய அரசியலுக்கு அச்சாரமாக அமைய வேண்டும். 

ஒரு நல்ல அரசியல் இயக்கம் என்பது எப்போதும் கொள்கைகள் சார்ந்தே இருக்க வேண்டுமே ஒழிய ஒருபோதும் அதன் தலைவர்களை சார்ந்து இருக்கக் கூடாது. எதற்கெனில் என்றாவது ஒர் நாள் மரணத்தைத் தழுவி அந்த தலைவரானவர் மண்ணுக்கு உரமாகவோ எரி தழலுக்கு சாம்பலாகவோ உருமாறி வெற்றிடத்தை ஏற்படுத்த நேரும். ஆனால் கொள்கைகள் காலத்திற்குமான அரசியல் அம்சமாக இருக்கும் பட்சத்தில் அந்த வெற்றிடமே அதற்கு தகுந்த அடுத்த தலைவரை நியமிக்கும். எதேச்சதிகார ஆதிக்க சக்தியினை தவிடு பொடியாக்கி தான் மறையும் வரை அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய க்யூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோ என்ற தனி மனித அடையாளத்தையும் தாண்டி அங்கு முன்னிறுத்தப்படுவது கம்யூனிசமும் அதன் ஒன்றுபட்ட கொள்கைகளும் தான்!

ஆகையால் கொள்கைகளை எளிமையாக கட்டமைப்போம். புதியதொரு அரசியல் அமைப்போம்!!

-சுர்ஜித் குமார்

No comments:

Post a Comment