"நிச்சயிக்கப்பட்ட எண்ணங்கள் எப்போதும் நிச்சயமற்றதாக இருப்பதில்லை.. அதன் கண்ணோட்டங்களே அதனை தீர்மானிக்கின்றன." - நிச்சயமாக அநாமதேயர் அல்ல.
விரக்தியின் உச்சத்தில் கழிவறையில் அமர்ந்திருந்த போது மேற்கூறிய தத்துவத்தை உதிர்த்தது தத்துவஞானி ஒருவர். அத்தத்துவ ஞானி நானன்றி வேறாரும் இலர்.
எதற்கிந்த விரக்தி? 'நான் யார்? நான் யார்?' குடியிருந்த கோயில் படத்தின் பாடல் வரியினைப் பற்றி இங்கு நான் குறிப்பிட வரவில்லை. சுய பரிசோதனை பற்றியும் குறிப்பிட முனையவில்லை. ஏனெனில் சுய பரிசோதனை என்பது, வாழ்வில் ஏதேனும் ஒரு புள்ளியைத் தொட்டவர்களுக்கானது. இன்னும் புள்ளியே வரையப்படாத என் வாழ்வில் அதன் காரணங்களை அறிய இதோ புரட்டுகிறேன் பிரம்மனின் அச்சுப்பிழைகள் நிறைந்த என் வாழ்வியலின் முதற் பக்கங்களை...
எனது பள்ளிப் பருவத்தின் பனி காலத்தில் ஓர் நாள், ஆசிரியை ஒருவர் வகுப்பு மாணாக்கரிடம் தங்கள் குறிக்கோள் என்ன, என்னவாக விழைகிறீர்கள் என கேட்டார். ஒவ்வொருவரும் டாக்டர், என்ஜினியர், போலீஸ் என அதே தொல்காப்பிய காலத்து பதிலைக் கூறி லஞ்ச் பெல் எப்போது அடிக்கும் என எதிர்ப்பார்த்து மூக்கு சளியை உள்ளுறிந்து கொண்டே அமர்ந்தனர். மூன்றாம் வரிசையில் சன்னலோரம் அமர்ந்திருந்த அந்த குண்டுப் பையன் மட்டும் 'டிரெயின் டிரைவர்' எனக் கூறியதாக ஞாபகம். அவனைப் பொறுத்தமட்டில் டிரெயின் டிரைவர்கள் ஹீரோக்களாக தெரிந்திருக்கக் கூடும். குண்டுப் பையன் ஆசனத்திற்கு ஒரு பென்சிலை சீவி வைத்து விட்டு, என் அபிலாஷையை சொல்ல நான் எழுந்தேன். "கார்டியாலஜிஸ்ட்" - என் திருவாய் மலர்ந்தேன்.
"கார்டியாலஜிஸ்ட்" - டிரெயின் டிரைவர் என்ற வார்த்தையை கேட்ட அதே ஐந்தாம் வகுப்பில் அந்த வார்த்தை சற்று வித்தியாசப் படவே செய்தது. ஏதோ வேற்று கிரகவாசி பதிமூன்றாம் வாய்ப்பாடு பாடியதைப் போல் என் ஆசிரியை உட்பட அனைவரும் ஒரு கணம் என்னை உற்று நோக்கினர். ஒரு மருத்துவமனையின் உட்சுவற்றில் மருத்துவர்கள் பெயர் தாங்கிய பெயர் பலகையில் அந்த மாய சொல்லை பார்த்த ஞாபகம். தொல்காப்பியங்களுக்கு இடையில் சுஜாதாவின் கதையாக இருக்கட்டுமே என 'கார்டியாலஜிஸ்ட்'-ஐ சொல்லி வைத்தேன். சில வினாடிகள் இடைவெளியில் ஆசிரியையின் கைத்தட்டலால் அங்கு ஆட்கொண்டிருந்த அமைதி மரணத்தைத் தழுவியது. மூக்கு சளிகளும் கோரசாக கைகளைத் தட்டின. புட்டத்தில் பென்சில் வாங்கியிருந்த குண்டுப் பையன் மட்டும் ரயிலேறி கோமாவுக்கு போயிருந்தான். எனக்கு நன்கு நினைவிருக்கிறது.. நான் கூறிய அந்த மாயச் சொல்லை கேட்டு முதல் வரிசையில் அமர்ந்திருந்த மாணவி ஒருவள் பெருமிதத்தோடு என்னை நோக்கினாள். என்னை ஏதோ அறிவு ஜீவியாக அவள் சித்தரித்திருக்கக் கூடும். அந்த மாணவி இன்று நிஜத்தில் ஒரு கார்டியாலஜிஸ்டாக ஆகி விட நான் இன்னமும் சாலையில் நிறுத்தப் பட்டிருக்கும் கார் கண்ணாடிகளில் பிம்பம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதே வேளையில் அவள் இதய மாற்று அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டிருக்கக் கூடும்.
அநேகமாக அதுதான் எனது முதல் ஆசையாக இருந்திருக்கக்கூடும். பின்னாளில் அதே ஆசை ஆசையாகவே பழுத்து அழுகியும் போனது. வார்த்தை பிறழாமல் படிப்பதென்பது எனக்கு இயல்பிலேயே கிடைத்த வரம் எனக் கூறலாம். செய்தி வாசிப்பாளராக ஆக வேண்டுமென ஒரு ஆசையும் அந்நாட்களில் துளிர்த்தது. அந்த வரம் ஒரு நாள் சாபமாக மாறிப் போன கதையும் அதே பள்ளிப் பருவத்தில் ஒன்பதாம் வகுப்பின் போது நிகழ்ந்தது. என் பள்ளியில் நடக்கவிருந்த அறிவியல் கண்காட்சிக்கு மாணவர்கள் ஒவ்வொருவரும் குழுவாகவோ தனியாகவோ ஒரு மாடலை செய்து காட்சி படுத்த வேண்டும். நாம் தான் ஐந்தாம் வகுப்பிலேயே கார்டியாலஜிஸ்ட் ஆனோமே. ஆகையால் மமதையில் பயாலஜி மிஸ்ஸுக்கு ஐஸ் வைக்கலாமென்று பயாலஜி சப்ஜெக்ட்டில் மாடல் ஒன்றை செய்து காட்ட வேண்டும் என தீர்மானித்து அதை அவரிடம் தெரிவிக்கவும் செய்தேன். உடன் பெருமிதமும் ஆர்வமும் கலந்த பயாலஜி மிஸ் அது என்னவென்று வினவ, நான்,"ரீப்ரொடக்டிவ் சிஸ்டம்" என்றேன்.
சற்றே கலவரமடைந்த அந்த பயாலஜி மிஸ்,"ரீப்ரொடக்டிவ் சிஸ்டம் இன் வாட்?" என கேட்டார். பதிலுக்கு நான்,"இன் ஹ்யூமன்" என்றேனே பார்க்கலாம். அவ்வளவுதான்.. விருட்டென்று ஸ்டாஃப் ரூமுக்கு விரைந்தார். விருதுக்கு சிபாரிசு செய்ய செல்கிறார் என நினைத்து கர்வத்தோடு சேமியா மீசைகளாகவும் துப்பட்டா தேவதைகளாகவும் மாறியிருந்த மூக்கு சளிகளை நோக்கினேன். இரட்டை ஜடைக்காரி தேவதை ஒருத்தி எத்தியோப்பியா நோக்கி முகத்தை திருப்பிக் கொண்டாள். அப்போது தான் ஒரு அணில் பல்லன் நான் உளறியதை எனக்கு உணர்த்தினான். 'ரெஸ்பிரேட்டரி சிஸ்டம்' என்பதற்கு பதில் 'ரீப்ரொடக்டிவ் சிஸ்டம்' என நான் வேண்டுமென்றே கூறினேன் என கம்ப்ளெயின்ட் செய்து விட்டிருந்தார் அந்த வட்ட நெத்தி பொட்டு பயாலஜி மிஸ். பின் கண்டிக்கிறேன் பேர்வழி என என் பெற்றோரைக் கூப்பிட்டு நான் பூப்பெய்தி விட்ட தகவலை அவர்களுக்கு தெரியப்படுத்தினர். அன்று முதல் நான் ஒரு சீரியல் ரேப்பிஸ்டாகவே அனைவருக்கும் தெரிந்தேன். பயானனமாகவே நகர்ந்தன அந்த பயாலஜி இரவுகள்!
அது சமயம் கணிதம் என் வாழ்வின் பெரும் பகுதியினை ஆட்கொண்டிருந்தது. ஆம், பெரும்பகுதி. ஒரு முறை கூட என்னை அது ஒரே முறையில் கடந்து சென்றதில்லை. என் மீது கொண்ட காதலின் பால் ஒவ்வொரு தேர்வுகளின் போதும் நான் அவளை (கணிதம்) ஸ்பரிசித்துக் கொண்டே இருக்க வேண்டியிருந்தது. ஆனால் இது நாள் வரையில் என் வாழ்வில் நான் எங்கும் இன்டக்ரல், டிஃபரன்ஷியல் கால்குலஸை பயன்படுத்தியதில்லை. டிரிக்னாமெட்ரி, ஜாமெட்ரி, அல்ஜீப்ரா, கடவுளே!! முகநூலில் பதிவுகள் இடுவதற்கு இவையாவும் எனக்கு எப்போதும் பயன்பட்டதே இல்லை.
கண நேரத்தில் வாகா எல்லையில் இருந்து வாலாஜாபாத்திற்கு 'யூ டர்ன்' அடிக்கும் ஆட்டோக்கள், நெடுஞ்சாலையை கோசாலை ஆக்கி பைக்கில் பால் வாங்க சென்றவனை அதே பாலை அவனுக்கு ஊற்றி பாடையில் அனுப்பும் மாட்டுக்கார வேலன்களைக் கண்டு கடுங்கோபமடைந்த நான் பிரதமர் ஆக வேண்டும் என விழைந்தேன். ஆம், பாக்கு போட்டு கண்ட இடங்களில் துப்பும் அந்த சிகப்பு பெயின்ட் வாய்களில் பம்புசெட் அமைத்து டெல்டா மாவட்டங்களுக்கு திருப்பி விட்டு முப்போகம் விளைவிக்க எண்ணினேன். மும்மாரி பொய்த்தாலும் இவர்களின் 'தூ'காறி பொய்க்காது. தன் ஜீரணா சக்தியிடம் ஜெயித்த கரடி ஒன்று ஆசன வாயால் ஏப்பம் விடுவது போன்றதொரு விநோதமான சப்தத்தை ரூட்ஸ் ஹாரன் எனும் பெயரில் வைத்துக் கொண்டு யமனையே அச்சுறுத்தும் வேகத்தில் சீறும் யமஹா பாய்ஸை கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்திற்கு கடத்திச் சென்று பதக்கப் பட்டியலில் இந்தியாவின் பெயரை பொறித்து விடலாம் என்றும் எண்ணினேன். 'காலைக் கடன் கழிக்க வந்த கழக 'ஆய்'வாளரே' என்று முக்கிய பிரமுகர் முக்கியதற்கும் போஸ்டர் ஒட்டும் சில அரசியல்வியாதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கி நாட்டை தூய்மையாக்கிட துடித்தேன். சேகு வேராவை போன்று புரட்சியாளனாய், சைலேந்திரபாபு போன்று ஐ.பி.எஸ் ஆபிசராய், இளம்பெண்களின் கனவுக்கண்ணனாக வலம் வர கங்குலி போன்று ஒரு கிரிக்கெட் வீரனாய் ஆகி விடலாம் என்று கூட எண்ணியதுண்டு. பின்பு தான் புரிந்தது, கங்குலியின் ஷாட்டுகளை (மாதர் சங்கங்கள் கவனத்திற்கு - இங்கு நான் குறித்திருப்பது கிரிக்கெட் ஷாட்டைப் பற்றி) விட அவரின் தோற்றமே பெண்களை அதிகம் வசீகரித்திருக்கிறது. எந்தவொரு பதவியோ தொழிலோ சமுதாயத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டு அதற்கு நான் தான் காரணம் என ஊர் புகழ வேண்டுமென நினைத்து நினைத்து, பின்னர் அதற்கு நீண்ட நெடிய தூரம் பயணிக்க வேண்டுமென பாதியிலேயே அவைகளை கை விட்டதின் விளைவு ஓவர் நைட்டில் ஒபாமா ஆகும் என் கனவினை சிதைத்து விட்டிருந்தது.
எனது அழுகிய ஆசைகளை அழகிய திரைக்காவியமாய் படைத்திட உயர்நிலை பள்ளிப்படிப்பின் போது ஒரு ஒளிப்பதிவாளராக இயக்குநராக ஆகி விட துடித்தேன். என்னை விஷுவல் கம்யூனிகேசன் சேர்த்து விடச் சொல்லி வீட்டில் மன்றாடினேன். அதெல்லாம் பணக்காரர்களுக்கான படிப்பு எனக் கூறிய என் உறவினர்களின் பேச்சுக்கு மதிப்பளித்து என்ஜினியரிங் என்னும் சோஷலிச உலகத்திற்கு நானும் தள்ளப்பட்டேன்.
இப்போது, ஒருவாறு என்ஜினியரிங் பட்டம் வாங்கி விட்டிருந்தேன். என் திருமண பத்திரிகையில் என் பெயருக்கு பின்னால் பி.டெக். என அச்சாகி என் அம்மாவை அது சந்தோஷப்படுத்தும். உண்மையில் நான் என்ஜினியர் தானா? நான் எந்தவொரு பாலத்தையும், சாலையையும் அமைத்திருக்கவில்லை. கொத்தனார்களும் மேஸ்திரிகளும் அதனை செய்து கொண்டிருக்கிறார்கள். எந்தவொரு என்ஜினையும் உயிர்ப்பிக்கவில்லை. மெக்கானிக்குகள் அதனை செய்து கொண்டிருக்கிறார்கள். குறைந்தபட்சம் ஒரு கம்ப்யூட்டர் என்ஜினியராக பைனரி இலக்கங்களான 11110000-வை கம்ப்யூட்டர் எப்படி புரிந்து கொண்டு செயல் படுகிறது எனக் கூட என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
எனது வாழ்வியல் புள்ளிக்கான தேடுதலில், சுணக்கம் ஏற்படுத்தும் வகையில் திட்டமிடாது செயல்பட்டு, தோல்விகளுக்கு முழு காரணம் நான் தான் என பொறுப்பேற்கும் முதிர்ச்சியே என் வாழ்வில் இதோ வரையப்பட்டிருக்கும் புள்ளி!
ஆக, என் விரக்திக்கான காரணமும் லட்சியமும் புலப்பட்டது. நான் இப்போதொரு எழுத்தாளன்!!
"லட்சியம் எப்போதும் கோலங்களின் கீழ் இருக்கும் புள்ளிகளில் இருந்து தான் பிறக்கின்றன..."
-மீண்டும் அதே தத்துவ ஞானி, நான், பயாலஜி இரவுகளின் நினைவுகள் கலைந்து, கழிவறை தாழ் திறந்து வெளியேறிய போது.
No comments:
Post a Comment