Thursday, 2 March 2017

பெண்டுலம்

'கிளடக்.. சிடங்.. கோங்ங்ங்...' முந்தைய இரவுக்கு ஃபேர்வல் கொடுத்து வழி அனுப்பியிருந்த எங்கள் வீட்டு கிரில்லை வெளிச்சத்தை வரவேற்க அப்பாவால் திறக்கப்பட்டிருந்த வேளை. விடிந்துவிட்டிருந்தது. அல்லது விடிந்து நெடு நேரமாகி தன் கடவாய்ப் பல் தெரிய சூரியன் நெருப்புச் சிரிப்பை உமிழ்ந்து கொண்டிருந்தது. ஆப்ப சட்டி விளிம்பு வரை அம்மா வார்க்கும் ஆப்பம் போல மொத்தத்தில் இருட்டு இல்லாதிருந்ததை மட்டும் தூங்காமல் தூங்கிக் கொண்டிருந்த எனக்கு புலப்பட்டது. 

சொப்பனத்தில் நீண்ட நாட்களுக்கு பின் வந்திருந்த அதே காட்சிகள். அதே கதாபாத்திரங்கள். செம்மண் கலர் பெயின்ட் அடித்திருந்த ஆன்டிக் ஸ்டைல் வீடு. உட்பக்கமாக இருந்த ஸ்பைரல் படிக்கட்டுகளைக் கடந்து மேலேறிச் சென்று வலது பக்க அறையை அடைந்ததும் அதே குங்குமக் கலர் சேலையில் இப்போது மஞ்சள் தாலி வெளியே தெரிந்த அந்தப் பெண். இதற்கு முந்தைய அந்த சொப்பன எபிசோட்களில் தாலியைப் பார்த்ததாக ஞாபகம் இல்லை. 

கிரில் கூப்பாடு போட்டதில் எனது சொப்பனமானது கலைந்திருந்தது தெரிந்தும், கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு எவாப்பரேட் ஆகிக் கொண்டிருந்த கனவை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு முயற்சித்தும் க்ளைமாக்ஸைக் காண முடியவில்லை. குறைந்தபட்சம் அந்தப் பெண்ணின் முகத்தையாவது ரீகலக்ட் செய்ய முயன்று தோற்றுப் போனேன். எப்படி சரியாக கனவு கடைசி சீனின் போது மட்டும் கலைந்து விடுகிறது? உடனே மறந்தும் விடுகிறது. ஒரு நாவலை தீவிரமாக படித்துக் கொண்டிருக்கும் போது அதன் கடைசிப் பக்கத்தை யாராவது கிழித்து வைத்திருந்தால் ஒரு உணர்வு ஏற்படுமே. அந்த உணர்வுகளை இப்போது அப்பா மீதோ கிரில் மீதோ காட்ட வேண்டுமென இருந்தது எனக்கு. 

சில நேரங்களில் மனித முகங்களைக் கடந்து சென்றாலும் அதில் ஏதோ ஒரு முகம் எங்கோ எதிலோ தடம் பதித்து சென்று விடுகிறது. அந்த முகம் நமக்கு தேவைப்படும் போதோ அல்லது தேவைப்படாத போதோ வாசனையாகவோ ஓசையாகவோ நம் மெடுல்லா ஆப்லெங்கேட்டாவில் தோன்றி மறையத்தான் செய்கிறது. உறக்கம் கொடுத்திருந்த நிறைவை அந்த இன்கம்ப்ளீட் சொப்பனமானது பறித்திருந்ததை எண்ணி ஒரு வித சலிப்போடு எழுந்து பாயைச் சுருட்டி பீரோ இடுக்கில் இடுக்கினேன். 

பிரபுவுக்கு எப்படி விடிந்திருக்கும் என அப்போது எனக்கு தோன்றியிருக்கவில்லை. தோன்ற வேண்டிய நியாயங்களும் இல்லை. ஆப்ப சட்டி இருள் நீடித்துக் கொண்டும் இருக்கலாம். அவன் தங்கியிருந்த அறைக்கு கிரில் இல்லாது, அவன் அந்த வேளையில் சொப்பனத்தில் மாரத்தான் கூட ஓடிக் கொண்டிருக்கலாம். 

காலை நேர இத்யாதி இத்யாதிகளை கடந்து ஒரு கப் ப்ளாக் காஃபி குடித்தால் நன்றாக இருக்கும் என இருந்தது. பால்கனியில் முன்னங்கைகளை ஊன்றிக் கொண்டே ப்ளாக் காஃபி பருகலானேன். எதிர் வீட்டு மார்வாடி பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல ஒன்றன் பின் ஒன்றாக வந்து வாசலில் நின்று கொண்டிருந்தனர். அநேகமாக வகுப்பிற்கு ஒரு பிள்ளை என இருப்பார்களாயிருக்கும். நீல கடுக்கண் போட்டிருக்கும் அந்த சேட்டுக்கு பின்னால் மூன்று முன்னால் டேங்க் மீது இரண்டு என பிள்ளைகள் பைக் முழுதும் மொய்த்திருந்தனர். ஒரு தள்ளு வண்டி கறி கடைக்காரர், ஒரு பட்டர்ஸ்காட்ச் கோன் டிப் வால் கொண்ட நாய், எங்கோ போர்த் தொடுக்கப்பட்ட அமாவாசை வடைக்கு படையெடுத்துக் கொண்டிருந்த காக்கைக் கூட்டம் இவை தவிர தெருவுக்கு உயிர் கொடுக்க ஒன்றுமில்லாதிருந்தது. இரண்டு தெருக்களை இணைத்திருக்கும் கார்னர் வீடு என்பதால் ஃ-க்கின் கீழ் வலப்புள்ளிப் பக்கத்தில் தூரத்தில் ஒரு கத்தரிப்பூ சுடிதார் வருவது தெரிந்தது.

தெருக்கோடி கீழ்வான நீலத்தின் கால் கட்டை விரல் நகம் பெயர்ந்து வருவது போலிருந்தது. ப்ளாக் காஃபியின் கடைசிச் சொட்டு நுனி நாக்கில் பட்டு உள் நாக்கில் படர்ந்து கொண்டிருக்கவும், கத்தரிப்பூ சுடிதார் ஃ-க்கின் நடுப்புள்ளியில் இடம் திரும்பவும் சரியாக இருந்தது. சில நொடிகளுக்கு முன் உயிரற்று கிடந்த தெருவுக்கு மீண்டும் உயிர் வந்திருந்தது. எங்கிருந்தோ ஒரு பட்டாம்பூச்சி பூக்களற்ற பூக்களில் தேன் குடிக்க காற்றில் கை வீசி மிதந்து கொண்டிருந்தது. ஒரு வேளை நான் கனவில் கண்டு மறந்திருந்த அந்த குங்குமக் கலர் புடவைப் பெண் இவள் தானோ? அதற்குள்ளாகவா அந்த ஆன்டிக் வீட்டிலிருந்து இவ்வளவு தூரம் வந்து விட்டிருப்பாள்? எங்கே கழுத்தில் அந்த மஞ்சள் தாலி தொங்குகிறதா பார்த்துவிடுவோமா? எண்ணங்கள் கலைந்து எத்தனிக்கும் முன் ஃக்கின் கீழ் இடப்புள்ளியைத் தொடவிருந்தாள் அவள். உலக உருண்டையின் இரு பக்கங்களாம் சூரிய சந்திர கிண்ணங்கள் மேல் பட்டுப் பட்டு ஒரு பெண்டுலம் போல் ஆஸிலேட் ஆகிக் கொண்டிருந்தது பின்னே விடப்பட்ட அவளது நீண்ட அந்த கரியக் கூந்தல். 

உள்ளறையில் மேசை மீதிருந்த போன்சாய் மர அடர் பச்சையின் கீழ் சார்ஜ் போடப்பட்டிருந்த அலைபேசி, தான் சார்ஜ் ஆகி விட்டிருந்ததன் அடையாளமாய் போன்சாய் பச்சைக்கு சமமாக ஸ்கீரினில் பச்சை போர்வை போர்த்திக் கொண்டிருந்தது. பிரபுவின் பெயரில் வறுமையின் நிறம். 

மிஸ்டு காலில் இருந்து பிரபுவை விடுவித்தேன். 

"இந்த காலர் டியூனை நீங்கள் பெற விரும்பினால் ஸ்டார் மற்றும் ஐந்தை அழுத்தவும். மாத வாடகை முப்பது ரூபாய், நிபந்தனைக்கு உட்..." 

முன்னூற்று ஏழாவது முறையாக அவன் வைத்திருந்த காலர் டியூன் என்னவென்றே தெரியாமல் போனது.

"மச்சி.. போன வாரம் ஊர்ல எனக்கு பொண்ணு பாத்துட்டு வந்தோம்ல.. அந்த பொண்ணோட அப்பா என்னைய பாக்க மதியம் சென்னை வர்றாராம்.. நைட் ஷிப்ட் முடிஞ்சு இப்பதா ரூமுக்கு வந்தன். டையர்டா இருக்குடா.. ஃப்ரீயா இருந்தா வர்றியா? அவர பிக்கப் பண்ணி லஞ்ச் போய்ட்டு ரூமுக்கு வருவோம்?"

கிருஷ்ணகிரி மாவட்டத்துப் பையன் பிரபு. சென்னையில் ஆறு வருடங்களுக்கு முன்பு ஒரு கம்பெனியில் ஒரே நாளில் இன்டர்வியூ அட்டென்ட் செய்து ஒரே டீமில் இரண்டாண்டுகள் வரை ஒன்றாக பணி புரிந்திருந்தோம். அதன் பின்னர் இருவரும் அரை டஜன் கம்பெனிகள் மாறியிருந்தாலும் அந்த இன்டர்வியூ நாள் நட்பு தொடர்ந்திருந்தது. வெங்கிட்டு டெய்லரின் கைங்கர்யத்தில் மொரப்பு காலர் சட்டையோடு நான் பார்த்திருந்த பிரபு, இன்று லோரோ பியானா ஷர்ட்டுக்கு மாறியிருந்ததற்குக் காரணம் ஆறு வருடமும் சென்னையும்! 

ப்ராண்டுகளில் மற்றும் தான் மாற்றமே தவிர பிரபுவுக்கென இருந்த ப்ராண்ட் அப்படியே தான் இருந்தது. வலது மணிக்கட்டில் வாட்ச் கட்டும் ஸ்டைல், ஜீரோ பாயின்ட் ட்ரிம் செய்யப்பட்ட அரை நாள் தாடி, பேன்ட் பாக்கெட்டுகளில் கைகளை நுழைத்து தலையை வலம் சாய்த்து கண்களை இடுக்கிச் சிரிக்கும் மேனரிசம் என அவனுக்காய் இருந்த ப்ராண்டுகள் அப்படியே தான் இருந்தன. 

சென்ற வாரம் பார்த்துவிட்டு வந்திருந்த பெண்ணைப் பற்றி சொல்லியிருந்தான் பிரபு. இதற்கு முன்னர் நிறைய பெண் பார்க்கும் படலங்கள் நடந்திருந்தாலும் ஜாதகம் சரி இல்லை, பொண்ணுக்கு மூக்கு சப்பை, பையனுக்கு பீர் தொப்பை என வழக்கமான குப்பை ரிஜக்‌ஷன்களால் அந்த சடங்கையே வெறுத்திருந்தவன், பொங்கலுக்கு ஊருக்கு சென்றிருந்த போது சர்ப்ரைஸாக அவன் வீட்டாரால் பெண் பார்க்க தூக்கிச் செல்லப்பட்டிருக்கிறான். 

உலகத்தில் எப்படி எல்லாம் சர்ப்ரைஸ் கொடுக்கிறார்கள்?! பில் கட்டாது மொபைல் நெட்வொர்க் ஆப்ரேட்டர் புண்ணியவான் அவுட்கோயிங் புடுங்கிய என் பாடாவதி சர்ப்ரைஸ்கள் போல் அது இருந்திருக்காது தானே? 

சுவற்றில் பல்லிளித்துக் கொண்டிருந்த டிஜிட்டல் க்ளாக் 09:03 என காட்டியது. எண்களின் நடுவில் ஒளிந்து ஒளிர்ந்த அந்த அரைப்புள்ளி மேலும் சில நிமிடங்களை விழுங்கிக் கொண்டிருக்க சற்று முன் பார்த்த பெண்டுல ஜடை நினைவுக்கு வந்தது. கலைந்த கனவும் கத்தரிப்பூ ஜடையும் நினைவிற்கும் மறதிக்கும் இடையே பெண்டுலம் போல் ஆடிக்கொண்டிருந்தது.

மதியத்திற்கு முன்னரே வந்துவிட்டிருந்த அவரை வரவேற்க நாங்கள் இருவரும் பஸ் ஸ்டாண்ட் சென்றிருந்தோம். கூட்டமாக இருக்கும் ஓரிடத்தில் முகம் பார்த்திராத ஒருவரை அடையாளம் காண முற்படும் அந்த தருணங்கள் சற்று படபடப்பான அலாதி மிக்கது. பார்த்ததும் போலியாகச் சிரித்து விடக் கூடாது என்பதால் அதற்கு முன்னரே ஒரு விதமான இளிப்பினை மோவாய்க்குள் இடுக்கிக் கொண்டிருத்தல் வேண்டும். நாமக்காரர், பட்டாணி கொரித்துக் கொண்டிருந்தவர், தினசரியை அக்குளில் சொறுகிக் கொண்டு கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பவர் என ஒவ்வொரு முகமாக நான் அந்த மனிதரை தேடிக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு குங்குமப் பொட்டுக் காரரை நோக்கி கையசைத்தான் பிரபு. உடன் நான் லோட் செய்து வைத்திருந்த புன்னகையை டிரிக்கர் செய்ய, மோவாயில் இருந்து அது ஈஈஈஈஈயென அவரை நோக்கி வெடித்தது. அது அவர் உடன் அழைத்து வந்திருந்த அவர் மகனின் மேலும் பட்டுத் தெரித்தது. 

பரஸ்பர அறிமுகத்திற்குப் பின் பஸ் ஸ்டாண்டை ஒட்டியிருந்த அந்தத் தண்டவாளத்தைக் கடந்து அந்த மல்டி க்யூசஸின் ரெஸ்டாரன்ட் போன்று தோற்றம் அளித்த ஒரு கஃபே உள் சென்றோம். சாம்பாருக்குள் தோய்ந்த மெது வடையினைப் போன்ற அதே இத்துப் போன மெனுவை ஒப்பிக்க ஆரம்பித்தார் வெயிட்டர். க்ளைமாக்ஸுக்கு முந்தியே எக்ஸிட் நோக்கி நடக்கும் பார்க்கிங் அவசரன்கள் போல், அவர் மெனுவை சொல்லி முடிக்கும் முன் நாங்கள் மூவரும் தோசையை சொல்லி முடித்தோம். எங்கள் டேபிளுக்கு பக்கவாட்டு சுவற்றில் ஒரு பெண்டுலம் வைத்த கடிகாரம். அதைக் கண்டதும் மீண்டும் என் மனம் ரீவைன்ட் செய்யப்பட்டு காலையில் கண்ட கத்தரிப்பூ பெண்டுலத்தையும், அதற்கு முன் சொப்பனத்தில் கண்ட தாலியும் பெண்டுலமென அசை போட்டது. அதற்குள் ஒவ்வொரு சட்னியை தொட்டுக் கொள்ளும் போதும் பிரபுவை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டிருந்த அந்த குங்கமப் பொட்டுக் காரரையும் நான் கவனிக்கத் தவறவில்லை. 

வந்தாயிற்று. பார்த்தாயிற்று. உண்டாயிற்று. பிறகென்ன கிளம்ப வேண்டியது தானே என்பது போன்ற சந்திப்பாக அது இருக்கக் கூடாது என்றிருந்தது அவருக்கென தெளிவாகப் புலப்பட்டது எனக்கு. பிரபுவுக்கு துணையாகச் சென்ற நான் அவருக்கு துணையாகிப் போனது அப்போது தான். 

"ஈவ்னிங்கா திரும்ப போலாமே?" என நான் சொன்னதும் படு ரிலீஃபாக காணப்பட்ட அவர் அதை சட்டென வெளிக் காட்டவில்லை. 

"இல்ல தம்பி.. பரவால்ல.. இப்போ கெளம்புனா தான் கரெக்டா இருக்கும்." என போலியாகச் சொன்னார். 

"இவ்வளவு தூரம் வந்துட்டீங்க.. வாங்களேன் அப்படியே பிரபு வேலை செய்யுற எடத்தலாம் பாத்துட்டு வருவோம்" என நான் சொன்னதும் அதற்காகவே காத்திருந்தவர் போல் புன்னகைத்தார். பிரபுவும் ஒரு சம்பிரதாய புன்னகையை பூத்தான். 

ஸ்டியரிங்கை பிடித்த பத்தாவது நிமிடத்தில் கண்ணாடி பதித்த அந்த அலுவலக கட்டிடத்தை காண்பித்தேன். அதனை ஏறிட்ட அவர்,"தம்பி.. ஆஃபிஸ் உள்ள போய் பார்க்கலாமா?" என வெளிப்படையாகவே கேட்டதில் தன் பெண்ணை மணக்கவிருப்பவன் எத்தகையவன் என தெரிந்து கொள்வதில் ஒரு தந்தையானவர் எவ்வளவு அக்கறையுடன் இருக்கிறார் எனத் தெரிந்தது. அவர் மனவோட்டம் அறிந்திருந்ததாலேயே நான் அவரை அழைத்து வந்திருந்தேன். 

உள்ளே அழைத்துச் சென்றதும் எனக்கும் பிரபுவுக்கும் பொதுவான நண்பர்கள் சிலர் எதிர்ப்பட்டனர். எங்களோடு இருந்த மூன்றாம் நபர் யார் எதற்கு வந்திருப்பார் என அவர்கள் யூகித்திருக்கக் கூடும். வாஞ்சையோடு அவரையும் வரவேற்றனர். நெதர்லான்ட் பேஸ்ட் கம்பெனி என்பதால் அதன் சூழல், வொர்க் கல்ச்சர் என அனைத்தும் வித்தியாசப்படவே பிரமிப்புடன் பார்த்திருந்தார் அவர். அவருக்கு ஒரு ஸ்பேஸ் தேவைப்படக் கூடும் என ரிசப்ஷனிலேயே நின்று கொள்ள, மனிதர் 'பே ஏரியா', 'கஃபேடேரியா' என ஆஃபிஸ் முழுதும் எப்படியோ ஒரு ரவுண்ட் வந்திருந்தார். 

பிரபு யாரிடமோ பேசிக் கொண்டிருக்க, என்னிடம் பேச்சு கொடுத்தார் அவர். நீங்க எங்க இருக்கீங்க, நீங்க எவ்வளவு சேலரி வாங்குறீங்க, என அவர் கேட்ட ஒவ்வொரு 'நீங்க'வும் பிரபுவை குறித்து தான் என எனக்கு தெரியாமலில்லை. நான் சொன்ன பதில்களும் பிரபுவுக்கானதென அவருக்கும் தெரியாமலில்லை. காம்ப்ளீமென்டாக அவரை என் வீட்டிற்கும் அழைத்துச் சென்று அம்மாவிடம் அறிமுகப்படுத்தினேன். 

மீண்டும் அவரை வழியனுப்ப பஸ் ஸ்டாண்ட் வந்தோம். "சரிங்க தம்பி.. ரொம்ப சந்தோஷம்.. வீட்டுக்கு போயிட்டு கால் பண்றேன்" என பிரபுவுடம் விடை பெற்றுக் கொண்டு மகளை பெற்ற அப்பாக்களுக்கே உரிய பெருமிதப் புன்னகையோடு பஸ் ஏறினார். 

பிரபுவின் ரூமை நோக்கி நடந்தோம். "எனக்கென்னமோ ஓ.கே. சொல்லிடுவார்னு தான் தோணுது" பிரபு அதை சொல்லி முடிக்கவும் அவன் மொபைல் அடிக்கவும் சரியாக இருந்தது. அதை அட்டென்ட் செய்த பிரபுவின் புருவங்கள் உயர்ந்து தளர்கையில் மறுமுனையில் யாரென தெரிந்து கொண்டேன். ஓ.கே!! 

மாலையாகியிருந்தது. தெரு முனை டீக்கடையின் காய்ச்சிய பால் வாசனை மழையை வரவேற்கத் தயாராயிருந்த மண் வாசனையோடு பின்னிப் பிணைகையில், என் பைக்கின் ஹெட்லைட் வெளிச்சத்தில் எதிர்ப்பட்டது ஒரு பெண்ணின் முகம். 

அதிகாலைச் சொப்பனம் - கத்தரிப்பூ சுடிதார் - பிரபு - குங்கமப் பொட்டுக் காரர் - எல்லாம் சேர்ந்து எதையோ சொன்னது.. பெண்டுலம்.. க்ளொக்.. டொக்.. க்ளொக்.. டொக்.. 

















Tuesday, 17 January 2017

மூன்றாவது தோசை


மூன்றாவது தோசைக்கு நான் அன்று ஆசை பட்டிருக்கக் கூடாது. இரயில்வே டைமில் என் மூன்று நிமிடங்களை முழுதாகத் தின்ற அந்த மூன்றாவது தோசையால் தான் சற்றே பெரிய இந்தத் துணுக்கினை எழுத வேண்டியதாயிற்று. மூன்று பத்திகளுக்கு மிகாமல் எழுத முயற்சி செய்து தோற்றுப் போனதற்கு அம்மா ஆசை காட்டிய அந்த முறுகலான மூன்றாம் தோசையே காரணம்.

ஷார்ட் பாட்டில் சைலன்சர் பொறுத்தியிருந்த என் புல்லட் பைக்கின் கிக்கரை உதைத்தேன். "டுபுடுபுடுபுடுபூ.... டுபுடுபுடுபு.. டுப்டுபுடுபூடட்.."
எம்டன் குண்டு சத்தத்தைக் கேட்ட என் வீட்டு வாசலில் படுத்துக் கிடந்த காபி கலர் நாயொன்று கேட்ட மாத்திரத்தில் கூட் ரோட்டிற்கு ஓட்டம் பிடிக்க உயிர்ப்பிக்கப்பட்ட புல்லட் பழவந்தாங்கல் இரயில் நிலையம் நோக்கிப் பாய்ந்தது. ஸ்டாண்டில் புல்லட்டை நிறுத்தி நடைமேடை படிக்கட்டுகளில் ஒன்றை தவிர்த்து ஒன்றை மிதித்து ஓடினேன். 

"ஜல்ஸ்க்.. ஜல்ஸ்க்.." தன் வயிற்று பசி போக்க பிச்சைப் பாத்திரத்தில் சில்லறைகளுக்குள் சாதிக் கலவரமூட்டிக் கொண்டிருந்தாள் கடைசிப் படிக்கட்டில் அமர்ந்திருந்த அந்த பழுப்புப் பல் யாசகி.

"பயணிகளின் கனிவான கவனத்திற்கு... வண்டி எண் நான்கு.. பூஜ்யம்.. ஐந்து.. இரண்டு.. மூன்று..  சென்னை பீச்-செங்கல்பட்டு வரை செல்லும் அடுத்த மின் தொடர் வண்டி நடைமேடை இரண்டில் இன்னும் சற்று நேரத்தில் வந்து சேரும்" - பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட்டின் கவரில் இருக்கும் அந்தப் பெண் குழந்தையின் சிநேகிதியானவள் அறிவித்தாள். 

திடீரென்று என் இதயம் ஒரு துடிப்பினை நிறுத்தியிருந்தது. எதற்கென கேட்டதற்கு என் முதல் வகுப்பு சீசன் பாஸ் நேற்றோடு காலாவதியாகிவிட்டதாக பதிலளித்தது. நடைமேடையின் அடுத்த முனையில் இருந்த டிக்கெட் கவுன்டரை நோக்கி நான் மீண்டுமொரு ஓட்டம் எடுத்தேன். நடைமேடை கேன்டீன் வடை வாசம், புத்தகக் கடையின் போஸ்டர் வாசகர்கள், விளக்குமாறால் மண் துடைத்துக் கொண்டிருந்த துப்புரவு ஆயா, தண்டவாளத்தின் ஓரம் துளிர்த்திருந்த சிறு புல்லினை தன் ஆண்குறி பிடித்து அபிஷேகம் செய்து கொண்டிருந்த சிறுவன் ஆகிய அனைத்தையும் ஓடிக் கிடந்து மூச்சிரைக்க கவுன்டர் வந்தடைந்தேன். சிக்னலில் இரண்டு மஞ்சள். தூரத்தில் ரயில் வருவதும் சிறு புள்ளியெனத் தெரிந்தது. அந்த மூன்றாம் தோசையை நொந்து கொண்டேன். நல்லவேளையாக எப்போதும் இலங்கை வரை நீண்டிருக்கும் அந்த நீண்ட வரிசை அன்று இல்லை. அதே வேளையில் முதல் வகுப்பு சீசன் டிக்கெட்டுக்கான 845 ரூபாயும் என்னிடத்தில் இல்லை. ஒரேயொரு வெந்தய நிற புது 500 ரூபாய் மட்டும் பர்ஸில் பல்லிளித்தது. பாழாய்ப் போன டிஜிட்டல் இந்தியாவின் ரயில் நிலையத்தில் ஸ்வைப் மிஷினும் இல்லை. வேறு வழியின்றி மாலை பைக் ஸ்டாண்டிற்கு கொடுக்க வேண்டிய பத்து இரண்டு ரூபாய் நாணயங்களில் ஐந்தை எடுத்து அந்த இருள் படர்ந்த கர்ப்பக்கிரக கவுன்டரில் இருந்த பெண் தெய்வத்திடம் கொடுத்தேன். 

ரயில் வரவும் அந்த பெண் தெய்வம் வரம் தரவும் சரியாக இருந்தது. என்ஜினுக்கு ஒரு பெட்டி பின்னிருந்த பெட்டியில் ஏறி அடுத்த ஒரு மணி நேர ஆட்சிக்கான நாற்காலியைத் தேடி கண்களால் துழாவினேன். மீனம்பாக்கம் வந்த போது ஒரு பயணி ராஜினாமா செய்ய அந்த நாற்காலிக்கு போட்டியின்றி நானே என்னை தேர்வு செய்து அமர்ந்து கொண்டேன். 

"வேருகல்ல பர்பீஈஈஈய்ய்.."
"அஞ்சி பத்துர்பா சம்சேய்ய்.."
தினசரி அலுவல்களுக்காக பயணிகளை சுமக்கும் அதே ரயில் சிலருக்கு தினசரி அலுவலாகவே இருந்தது. புலம் பதிப்பக புத்தகமொன்றை படித்துக் கொண்டிருக்கும் சிகப்பு ஜோல்னா பை மாட்டிய பஞ்சுத் தலை தாத்தா, ஐந்தாறு ஸ்டேஷன்கள் மட்டுமே நீடித்த கிசு கிசு பேசும் பல நூறாண்டு ரயில் சினேகிதங்கள், ஐபாட்களை ஏற்றுக் கொள்ளாது தன் சைனா ஃபோனில் இளையராஜாவே இசையமைத்ததை மறந்த, யாரும் அதிகம் கேட்டிராத பாடலை சவுன்டாக அலறச் செய்யும் சுப்பிரமணியபுரத்து பெல்ஸ் பேன்ட் காரர் என இந்தப் பெட்டியில் இருந்த முகங்களுக்கும் முதல் வகுப்பில் பயணிக்கும் முகங்களுக்கும் நிறையவே வித்தியாசங்கள் இருந்தன. இவர்கள் யாவரும் பெரும்பாலும் முதல் வகுப்புகளில் தென்படுவதில்லை. 

காட்சிபடுத்தப்படும் யாவற்றையும் எழுத்துகளிலும், எழுத்துகளின் ஆழங்களை அழகாக காட்சிபடுத்துதலிலும் உண்டான முரணில் இடப்பக்க ஓரத்தில், கட்ட விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் நடுவில் அமர்ந்து தாளினை முத்தமிடும் பேனாக்களைக் கொன்று, ஸ்மார்ட் ஃபோன்களில் கட்ட விரலால் தட்டெழுத முயலும் என்னைப் போன்ற முதல் வகுப்பு பயணிகள் எவ்வளவு தருணங்களை இழக்கிறோம் என அப்போது அறிந்தேன். 

பொத்தேரி வந்த போது நான் பயணித்த பெட்டியில் அர்த்தநாரிகள் இருவர் ஏறினர். 

"தட்.. தட்.." இரு கைகளுக்கும் நடுவில் அவமானங்கள் பல தாங்கிய அவர்களின் வாழ்வோசை கேட்டது. கை நீட்டி யாசகம் கேட்கும் யாசகர்களை ஏளனமாகப் பார்க்கும் சிலர் கை தட்டி யாசகம் கேட்ட அவர்களை கண்டும் காணாதது போல் சன்னல் கம்பிகளின் வெளியே கடந்து சென்ற மின் கோபுரங்களை எண்ணிக் கொண்டிருந்தனர். 

"ஹெல்ப் பண்ணுங்க சார்" - என் தோள் தொட்டாள் அந்த அர்த்தநாரிகளுள் ஒருவள். அந்தத் தொடுதலில் அவளுக்கு ஒரு நம்பிக்கை ஆட்கொண்டிருந்தது. கோபுரங்களை எண்ண முடியாது சட்டை பாக்கெட்டில் துழாவி கையில் சிக்கிய சில்லறையை எடுத்து அவள் கைகளில் திணித்தேன். அந்த நம்பிக்கை இப்போது ஆசியாக என் தலை மீது மாறியிருந்தது. இம்முறை நான் மூன்றாவது தோசையை நொந்து கொள்ளவில்லை.

-சுர்ஜித் குமார்




Saturday, 14 January 2017

கூழாங்கல்


 
வீரவநல்லூர்
3 கி .மீ 


துரு பிடித்த பழைய வழி காட்டிப் பலகையை ஒட்டித் திரும்பிய வளைவுச் சாலையில் நின்றது அந்தப் பேருந்து. திருப்பத்தில் இருந்து பிரியும் ஒரே ஊர் வீரவநல்லூர் என்பதால் அந்த ஊர் மக்கள், நிறுத்தத்திலிருந்து 3 கி.மீ நடந்து தான் செல்ல வேண்டும். துரு பிடித்த பலகைக்கு பாட்டன் முறையாக அமைந்த அந்தப் பேருந்தில் இருந்து இறங்கினான் வீராமுதன். 

ஏழாம் வகுப்பு இறுதித் தேர்வினை எழுதிக் கொண்டிருக்கும் போதே அவன் மனம் விடுமுறையை நினைத்து அசை போடத் துவங்கியிருந்தது. வேறெங்கு செல்வது காட்டிலும், பாட்டி வீட்டினில் கோடை விடுமுறையை கழிப்பதில் தான் அவனுக்கு மிகுந்த ஆர்வம். சிம்ம சொப்பனமாக இருந்த கடைசி நாள்  கணக்கு பாடத் தேர்வினை எழுதி விட்டு அன்று பிற்பகலே தன் தாயுடன் ஊருக்கு கிளம்பி வந்திருந்தான். மூன்று தெருவுக்கு அப்பால் இருக்கும் 

பள்ளிக்குச் செல்ல மிதி வண்டி கேட்டு அழுத வீராமுதன், தாத்தா பாட்டியினைக் காண பேருந்து நிறுத்தத்திலிருந்து மூன்று கி.மீ. நடந்து செல்வதை பொருட்டாகவே எண்ணவில்லை. 

சென்ற பொங்கலுக்கு வந்த போது தார் சாலையாக பளபளத்த கிராம சாலை, சமீபத்தில் பெய்த மழைக்கு பலியாகி பல்லிளித்தது. ஆனால் பாதையின் இரு மருங்கிலும் கொஞ்சிய இயற்கை அதனை மறக்கடித்தது. ஈச்சம் பழ மரங்கள், அதனை ஒட்டி அமைந்த வயல் வெளிகள், தூக்கணாங் குருவிகள், மழை வருமா என ஆருடம் சொல்லும் தும்பிப் பூச்சிகள், மாலைச் சூரியன் வண்ணம் தீட்டிய செவ்வானம் என ஒவ்வொன்றையும் ரசித்த படியே நடக்கலானான்.
"வாம் மா.. எப்டி இருக்க? பிரயாணம் லாம் சௌரியம் தானே... மாப்ள எப்ப வர்றார்?" என அன்போடு வினவியபடியே உள்வாசலில் இருந்து மகளை வரவேற்றார் நல்லசிவம். 

"நல்லாயிருக்கேன்பா.. அடுத்த வாரம் லீவு சொல்லிட்டு வர்றேனுருக்கார்.. நீங்க எப்டி பா இருக்கீங்க? அம்மா எங்க?" எனக் கேட்டவாறே கண்களை மேய விட்டாள் சுமதி. இரண்டு நாட்களுக்கு முன்பே வந்திருந்த தனது அக்கா, தங்கையைக் கண்டதும் புன்னகைத்து அவர்களைக் கட்டிக் கொண்டாள். பையை வாங்கி உள்ளறையில் வைத்து பின்புற தோட்டத்திற்கு அம்மாவைக் காண அழைத்துச் சென்றாள் பத்மா, சுமதியின் மூத்த சகோதரி. 

நல்லசிவம் - விசாலாட்சி தம்பதியினருக்கு நான்கு மகள் மற்றும் ஒரே மகன். நான்கு பெண்களையும் நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்த பெருமை தம்பதியினரைச் சாரும். இரண்டு பெண்களுக்கு அடுத்து பிறந்த மகன் ஆனந்தன் புதிதாக திருமணமான கடைசி தங்கையை அழைத்து வர டவுனுக்குச் சென்றிருந்தான். இன்னுமோர் தங்கை மறுநாள் வரவிருப்பதாக இருந்தமையால் வீடே கல கலவென இருந்தது.

"வாடி சுமதி.. இப்ப தான் இளையவ கடைசி பஸ்ஸ புடிக்க முடியாதுனு டவுன்ல இருந்து போன் பண்ணா.. ஆனந்தன் கூட்டி வர போயிருக்கான். பசங்க பரீட்சலாம் எப்டி எழுதி இருக்காங்க? வீரா எங்க?" என ஆட்டுக்கல்லில் மாவரைத்தபடியே வினவினார் விசாலாட்சி.   

வாசலில் தனது தாத்தாவை அணைத்தவாறே, செல்ல நாய் சீசர் தன் மீது பாய்ந்து நக்கியதை ஏற்றுக் கொண்டான் வீராமுதன். தன் பங்குக்கு வரவேற்ற சீசருக்கு ஒரு செல்ல தடவுதலைக் கொடுத்து பாட்டியைக் காண தோட்டத்திற்கு ஓடினான். பெரியம்மா, சித்தி மற்றும் பாட்டியின் உபசரிப்பிற்குப் பின் கிராமத்தில் தன் அண்டை வீட்டு சிநேகிதனான மணியைக் காணச் சென்றான். மணியும் அவனுக்கு உறவே.. அவனோடு சேர்ந்து தன் பெரியம்மா மகன் ஜெகனும் விளையாடிக் கொண்டிருந்தான். இருவர் கூட்டணி இப்போது மூவர் கூட்டணியாயிற்று. 

மாலை நேரமானதால் மேய்ந்து கொண்டிருந்த நாட்டுக் கோழிகளைப் பிடித்து கூடையில் அடைத்தார் பாட்டி. அதற்குள் ஆனந்தன் மாமா கடைசி சித்தியை அழைத்து வந்திருந்தார். மாடுகளைக் கட்டியபடியே தன் மருமகன் வீராவை நலம் விசாரித்தார். தனது தந்தைக்குப் பிறகு விவசாயம் பார்க்கவே விரும்பி அதனை செய்து வந்தார் ஆனந்தன். 

அன்று வெள்ளிக்கிழமை என்பதால் தொலைக்காட்சியில் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சி ஒளிபரப்பலானது. அந்த கிராமத்திலேயே நல்லசிவம் வீட்டில் தான் தொலைக்காட்சி இருந்தமையால் ஊரார் சிலர் வயலும் வாழ்வும் பார்த்த பின்னர் ஒலியும் ஒளியிலும் மூழ்கினர். கதவுகள் வைத்து பலகையினால் பொட்டி போன்று அமைத்து அதனுள் இருந்த பழைய சாலிடர் தொலைக்காட்சியில் ஈஸ்ட்மென் கலரில் அனைவரும் பார்க்கலாயினர். ஒரு சிலர் வீட்டிற்கு வெளியில் நின்றபடி சன்னல் கம்பிகளூடே பார்த்து ரசித்தனர். தொலைக்காட்சியை இயக்கும் பொறுப்பு வீராவிற்கு. அதில் ஒரு பெருமிதம் அவனுக்கு. நிகழ்ச்சி முடிந்த பின்னர் தத்தம் அவர்கள் வீட்டிற்குச் செல்ல, நல்லசிவம் நீண்ட நாட்களுக்குப் பின்னர் மகள்களுடன் சேர்ந்து இரவு உணவினை உண்டார். உரையாடல்கள் பெரும்பாலும் பிள்ளைகள் படிப்பு பற்றியே இருந்தது. இரவு உணவுக்குப்பின் வீட்டு வாசலில் பெரிதாக கருங்கல்லால் ஆன திண்ணை மேல் மகள்கள் மற்றும் விசாலாட்சி குடும்பக் கதைகள் அளக்க நல்லசிவம் கயிற்றுக் கட்டிலில் கண்ணயர்ந்தார். ஆனந்தன் கரும்பு தோட்டத்திற்கு காவலுக்குச் சென்றார். உடன் செல்ல நாய் சீசரும் சென்றது. வீரா, மணி, ஜெகன் மற்றும் சில வாண்டுகள் சேர்ந்து வீட்டின் முன்புறம் இருந்த பெரிய திடலில் நிக்கல் குந்தல், ஓடிப் பிடித்தல் என விளையாடிக் கொண்டிருந்தனர். கிராமத்தில் சீக்கிரமே உறங்கும் பழக்கம் இருந்ததால் வேறு வழியின்றி சிறுவர்கள் படுக்கச் சென்றனர். தான் வழக்கமாக டியூஷன் முடித்து வரும் நேரம் அது வீராவிற்கு. அதனால் முதலில் சற்று புரண்டு படுத்தவன் சீக்கிரமே கிராமியத் தென்றலின் வருடலில் தூங்கலானான். 

பொழுது புலர்ந்து, சேவல் கூவியது.. கண் விழித்து பார்த்த வீராவின் எதிரில் பாட்டி சாணம் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருப்பது மங்கலாக தெரிந்தது. அம்மா, சித்திகள் மற்றும் பெரியம்மா தத்தம் தங்களது பணிகளில் மும்முரமாக இருந்தனர். காவலுக்குச் சென்றிருந்த ஆனந்தன் மாமாவும் வீடு திரும்பி இருந்தார். காலைக்கடனுக்கு சவுக்குத் தோப்புக்குச் செல்ல மணி மற்றும் ஜெகனுடன் செல்ல ஆயத்தமானான் வீரா. வீட்டிற்கு வந்ததும் எண்ணெய் தேய்த்து விட்டார் பாட்டி. வெந்நீரில் நன்கு குளித்து புத்துணர்ச்சியாக இருந்த வீராவிற்கு அவன் விரும்பிய கேழ்வரகு கூழ் பாட்டியால் வழங்கப்பட்டது.  

"தேங்க்ஸ் பாட்டி.." எனக் கூறி ஒரே மடக்கில் கூழை பதம் பார்த்த வீரா, கூட்டாளிகளுடன் வயலில் இருக்கும் களத்து மேட்டிற்குச் சென்றான். தென்னை மட்டை கொண்டு தாத்தா செய்து கொடுத்த கிரிக்கெட் மட்டையில் விளையாடினர் சிறுவர்கள். பந்து மணியின் சொத்து. சிறிது நேரம் கழித்து கிணற்றில் ஆரவாரமாகக் குதித்து நீச்சல் அடித்தனர். சென்ற வருட விடுமுறைக்கு வந்த பொழுது தாத்தாவும், மணியின் அப்பாவும் கயிறு கட்டி அவனுக்கு நீச்சல் பழகி இருந்தனர். பின்னர் மதிய உணவுக்கு வீட்டிற்குச் சென்ற வீரா தன் பெரிய சித்தி மற்றும் அவரது பெண் குழந்தையைக் கண்டு குதூகலமானான். தனக்கு தென்னை மட்டை கிரிக்கெட் மட்டை செய்து கொடுத்தது போலவே தங்கைக்கும் இலவம் பஞ்சினால் பொம்மை செய்து கொடுத்து அதற்கு தூளியும் கட்டிக் கொடுத்தார். தாத்தாவின் கருமித்தனம் என அதனைச் சொல்லலாகாது, மாறாக அவரது கைவினை எனக் கூறலாம். அப்படித்தான் வீராவும் அதனை ஏற்றுக் கொண்டான். பேரப்பிள்ளைகள் ஆசைப்பட்டவை அனைத்தையும் செய்யலானார் நல்லசிவம். நுங்கு வெட்டிக் கொடுப்பது, இளநீர் இறக்குவது என ஒரு பக்கம் தாத்தா அன்பு பொழிய, நாட்டுக்  கோழி முட்டை, தட்டடை, அதிரசம் என பாட்டி அசத்த தனது டிராக்டர் வண்டியில் ஏற்றி வயலில் சேடை ஓட்டுவது, திருவிழாவிற்கு அழைத்து சென்று இராக்கூத்து காண்பது, தள்ளு வண்டியில் வரும் பால் ஐஸ், சேமியா ஐஸ் என வாங்கித்தருவது என ஆனந்தன் மாமாவும் தன் பங்கைக் காட்டினார். பெரியவர்களும் தாயம், சீட்டு என பொழுது போக்குக்காக சில விளையாட்டுகளுடன் பொழுதைக் கழித்தனர். அவ்வப்போது வந்த மருமகன்களும் சிறப்பாக கவனிக்கப்பட்டனர்.

இப்படியாகக் கழிந்த வீராவின் விடுமுறை முடிவுக்கு வந்தது. 

"பள்ளூடம் தொறக்க இன்னும் நாலு நாளு இருக்கே.. அதுக்குள்ள என்ன அவசரம்?.. பொறுமையா போலாம்ல..?" அக்கறையோடு சுமதியைக் கேட்டார் விசாலாட்சி.

"இல்லம்மா இப்ப போனாத்தான் கரக்டா இருக்கும்..  யூனிபார்ம் வாங்கி தைக்க கொடுக்கணும், ஸ்கூல்ல போயி புக்ஸ் லாம் வாங்கி அட்டை போடணும். அதுவும் இல்லாம ஒரு மாசமா நல்ல சாப்பாடு சாப்ட்டுருக்க மாட்டார். அவரையும் கவனிக்கணும்ல..?" துணிகளை மடித்து பையில் அடுக்கியவாறே பதில் அளித்தார் சுமதி. 

"மறுபடியும் காலாண்டு லீவ்ல வரேன் மா.." - சுமதி.
"கும்பலா இருந்துட்டு இப்போ திடீர்னு கெளம்பி போனீங்கன்னா வீடே வெறிச்சோனு இருக்கும்.. பத்மாவும் நாளைக்கே கிளம்புறா.." - வருத்தம் தோய்ந்த முகத்துடன் கூறிய அம்மாவைச் சமாதானப் படுத்தினார் சுமதி.

"காலையில அஞ்சு மணிக்கு மெட்ராஸ் பஸ் இருக்கு. ரெண்டு மணி நேரத்துல போயிடலாம்.. எல்லாம் எடுத்து வெச்சுக்கிட்டியா?" என தம்பி ஆனந்தன் கேட்டதற்கு தலையை ஆட்டிய படியே, "வீரா...." என அழைத்தார் சுமதி. 

சீசரை வருடியபடியே சோகத்துடன், "வரேன் மா.." என பதிலளித்தான். சீசரும் ஏனோ சோகமாக இருந்தது. 

"உன் லக்கேஜ் லாம் எடுத்து வை... நாளைக்கு நாலு மணிக்கு எந்திரிக்கணும்." - அக்கறையின் மிகுதியில் சுமதி சொல்ல, தன் பொருட்களை சரி பார்த்து எடுத்து வைத்தான் வீரா.

விடியற்காலை - தாத்தா பாட்டி கால்களில் விழுந்து ஆசி பெற்றான் வீரா. அவனை அரவணைத்து, கட்டி தழுவி நூறு ருபாய் கொடுத்தனர்.

"வேண்டாம் தாத்தா..."

"வீரா.. தாத்தா தந்தா வேண்டாம்னு சொல்லக் கூடாது.. சேத்து வெச்சு உனக்கு புடிச்சத வாங்கிக்கோ.."

கண்ணீரும் புன்னகையும் சேர்ந்தவாறு அதைப் பெற்றுக் கொண்டான் வீரா. என்றைக்கும் தாமதமாக வரும் மெட்ராஸ் பேருந்து அன்று, ஓட்டுனரின் தொழில் பக்தி மிகுதியால் சரியாக ஐந்து மணிக்கு வந்தது. வீராவிடம் ஒரு வினோத பழக்கம் இருந்தது. அதாவது, அவன் விடுமுறை முடிந்து சென்னைக்குச் செல்லும் பொழுதெல்லாம், வீரவநல்லூர் ஞாபகமாக எதையாவது எடுத்துச் செல்வது. சென்ற முறை தொட்டாச்சிணுங்கி இலை, மாந்தோப்பில் கிடந்த காய்ந்த சருகு என ஏதாவது. பள்ளிக்குச் செல்லும் போது தன் பென்சில் பாக்ஸில் அதனை எடுத்துச் செல்வான். தனக்குப் பிடிக்காத கணக்குப் பாடம் நடக்கையில் அதனைப் பார்த்து தன் விடுமுறை நாட்களை நினைவு கூர்ந்து கனவு காண்பான். இம்முறை அவன் எடுத்துச் செல்வது கூழாங்கல். 

நல்லசிவம் தம்பதியினருக்கு பேரனை பிரிய மனமில்லாமல் சற்று கலங்கினர். சில நேரங்கள் கடைசி நொடியில் பயணம் இரத்தாகும். கடைசி நேரத்தில் பேருந்து வராது, முக்கியமான பொருளை சுமதி மறந்திருப்பார். பாட்டியின் கண்ணீரைப் பார்த்து சுமதி மனம் மாறியதும் உண்டு. ஆனால் இம்முறை ஏனோ அதெல்லாம் நடைபெறவில்லை. பேருந்தில் ஏறிய வீரா, சுமதி இருவரும் கையசைத்து விடை பெற்றனர். இரும்பு கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் செய்யப்பட்ட பேருந்து, இருக்கைகள் சனல் கயிற்றால் கட்டப்பட்டு பரிதாபமாக காட்சி அளித்தது. வீராவுடன் சேர்ந்து அதுவும் வீறிட்டு அழுதபடியே சென்னை நோக்கிச் சென்றது.

அநேகமாக அது தான் வீரா கடைசியாக வீரவநல்லூரில் கழித்த நீண்ட விடுமுறை. அதற்குப் பன் ஆனந்தன் திருமணம், பாட்டி, தாத்தாவின் மரணங்கள் என காலங்கள் உருண்டோடின.

வீராமுதன் பொறியியல் வல்லுனராக தேர்ச்சிப் பெற்று வெளிநாடில் வேலை செய்யும் வாய்ப்பும் கிட்டியது. ஒரு மாத விடுமுறையில் இந்தியா வந்திருந்தான் வீரா, தன் மனைவி மற்றும் நான்கு வயது மகள் சாராவுடன். ஆம் அவனுக்கு திருமணம் ஆகியிருந்தது. 

"அப்பா.. ஒரு வாட்டி வீரவநல்லூர் போய் வருவோமா..?" - வீரா தன் அப்பா வாசுதேவனிடம் கேட்டான்.

"அங்க இப்ப யாருமே இல்லியேப்பா.. பாட்டி தாத்தாக்கு அப்புறம் ஆனந்தனால அங்க அவன் பொண்டாட்டி, புள்ளைகளோட தனியா இருக்க முடில. அவனும் புள்ளைங்க படிப்ப பாக்கணும்ல, அதான் டவுன் பக்கம் வந்து செட்டில் ஆயிட்டான்." - அப்பா சொல்லச் சொல்ல அதிர்ச்சியாக இருந்தது வீராவிற்கு.

"ஆமாப்பா.. அப்பா சொல்றது நிஜம் தான்.. நிஜம்னு சொல்றத விட எதார்த்தம்னு சொல்லலாம். விவசாயம் முன்ன மாறி இல்ல. அதனால கொஞ்ச நிலத்துல பருவத்துக்கு ஏத்த மாறி கரும்பு, மலாட்டனு போட்டு விவசாயத்த தக்க வெச்சுட்டு வரான். இப்ப அவன் ரியல் எஸ்டேட் பண்றான் பா.. அதுல கணிசமான தொகை கிடைக்குதாம். எங்க பேர்ல இருந்த விவசாய நிலங்களையும் உன் பேருக்கு பிளாட்டா மாத்த சொல்லிட்டோம்." - பேத்தி சாராவுக்கு உணவூட்டிய படியே சுமதி சொல்லி முடித்தார்.


"நம்ம வீடு என்னாச்சு மா..?"

"வீடு அப்படியே தான் இருக்கு. தாத்தா, பாட்டி தவசம், ஊர் கோயில் கும்பாபிஷேகம்னா எப்பவாச்சு போய்ட்டு வருவோம். கடைசியா ஆனந்தன் பொண்ணு சமஞ்சதுக்கு அங்க தான் புட்டு சுத்தப் போனோம். முனீஸ்வரனுக்கு கிடா வெட்டி பொங்க வச்சு வந்தோம்."

தன் மாமாவின் தொழில் மாற்றம் குறித்து, ஏற்கனவே ஓரளவு தாய் தந்தையுடனான ஸ்கைப் (skype) உரையாடல் போது தெரிந்து வைத்திருந்த வீரா, பள்ளிக் காலங்களில் தனக்கு சொர்க்க பூமியாக விளங்கிய வீரவநல்லூர் பாட்டி வீடு பற்றி சுமதி சொன்னதும் கலங்கினான். உடனே அங்கு போக வேண்டும் என தோன்றியது அவனுக்கு. 

மறுநாள் தை பொங்கல். தாத்தா பாட்டி வாழ்ந்த அந்த வீட்டில் பொங்கல் வைத்து வழிபட விரும்பி காலையே அனைவருடனும் காரில் புறப்பட்டான்.

அதே வளைவுச் சாலை வழிகாட்டிப் பலகை அவனை வரவேற்றது. ஆனால் இம்முறை பிரம்மாண்டமான விளம்பர வளைவு. 

"சென்னைக்கு மிக மிக அருகில் வீரவநல்லூர் - சதுர அடி 100/- மட்டுமே" என்ற விளம்பர பதாகையில் போலியாகச் சிரித்தாள் ஒரு விளம்பர நடிகை.
இம்முறை ஈச்சம்பழ மரங்கள் இல்லை, தும்பி பூச்சிகள் இல்லை, தூக்கணாங் குருவிகள் இல்லை. அவை அனைத்தும் லே அவுட்டாகவும், கேட்டட் கம்யூனிட்டியாகவும் மாறி இருந்தது. கனத்த இதயத்துடன் வீட்டை நோக்கி காரை விரட்டினான் வீரா.

பசுங்கன்று ஒன்றிற்கு தண்ணீர் காட்டிக் கொண்டிருந்த மணியின் தாயார் வரவேற்றார்.

"எப்டி இருக்கீங்க பெரியம்மா..? மணி என்ன பண்றான்?" 

"நல்ல இருக்கேன்பா.. மணி திருப்பூர்ல பனியன் கம்பெனில இருக்கான். மாசம் ஒரு வாட்டி வருவான். இந்தாட்டி பெரும் பொங்கலுக்கு மட்டும் தான் லீவாம். சேந்தாப்புல லீவு கெடக்கலனு வர்ல. நேத்து தான் நீங்களாம் பந்து விளாண்ட மாறி இருக்கு. அதுக்குள்ள நெடு நெடுன்னு வளந்துட்டிங்க.." - கிராமிய பேச்சு வாடையுடன் மணியின் தாய் உபசரித்தார். 

தன் மனைவி மற்றும் மகளை அறிமுகம் செய்து மணி வீட்டில் இருந்த சாவியை வாங்கி  தன் பாட்டி வீட்டிற்குச் சென்றான். பெரிய இரும்பு சாவி அது. திறந்து உள்ளே சென்றான். சிலந்தி வலை பின்னல்களுக்கு மத்தியில் தனது தாத்தா, பாட்டியின் உருவப்படங்கள் அவனை பார்த்து மெல்லச் சிரித்தது. எலிகளும், வவ்வால்களும் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தன. பின்வாசலுக்குச் சென்றான். ஆட்டு உரலில் ஈரம் பட்டு பல ஆண்டுகள் ஆகி இருந்தது. தாத்தாவின் கயிற்றுக் கட்டில் ஒரு கால் முறிந்தபடி சுண்ணாம்புச் சுவரில் சாய்த்து வைக்கப் பட்டிருந்தது. 

அதை எடுத்துப் போட்டு, மாறாமல் இருந்த வேப்ப மர நிழலில் சற்று நேரம் படுத்தான். தூங்கிப் போன வீரா, மணியின் தாயார் கருப்பட்டி காப்பியுடன் எழுப்பியதில் விழித்தான். காப்பியை ருசித்தபடியே, "பெரியம்மா.. பக்கத்துல ஆள் யாராச்சு இருந்தா வர சொல்லுங்களேன்.. வீட்ட சுத்தம் பண்ணி பொங்க வெக்கணும்."

சற்று நேரத்தில் பெரியம்மா அனுப்பிய ஆளின் உதவியால் வீட்டை நன்கு சுத்தம் செய்து, தாத்தா பாட்டி உருவப்படங்களுக்கு பொட்டு வைத்து, விளக்கேற்றி பொங்கல் வைத்து வழிபட்டான். சற்று நேரம் மணி வீட்டில் பேசிவிட்டு விடை பெற்றான் வீரா. சென்னையில் உறவினர் அனைவரையும் சந்தித்து அவர்கள் உபசரிப்பினைப் பெற்று வெளிநாட்டிற்கு புறப்பட விமான நிலையம் வந்தடைந்தான் வீரா.

பின்னிரவு வேலை -
சென்னை பன்னாட்டு விமான நிலையம்
சர்வதேச முனையத்தின் பார்வையாளர் வளாகத்தில், விடுமுறை முடிந்து ஊருக்குச் செல்லவிருந்த தங்களது மகன், மருமகள் மற்றும் சாராவை வழியனுப்ப வந்திருந்தார்கள் வாசுதேவன்-சுமதி தம்பதியினர். தடுப்பு வேலியின் மேல் அமர்ந்திருந்த பேத்தி அன்பு முத்தங்களால் தனது தாத்தாவின் கன்னங்களை எச்சில் செய்து அவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்திக் கொண்டிருந்தாள். வீரா Cathay Pacific ('கேத்தே பசிஃபிக்' ஹாங்காங் மார்க்கமாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லக் கூடிய விமான சேவை) என அச்சடிக்கப்பட்டிருந்த விமானமேறும் சீட்டினை (boarding pass) நிரப்பிக் கொண்டிருந்தான். மருமகளின் கைகளைப் பற்றிக் கொண்டு சில வாழ்வியல் நுணுக்கங்களை கூறிக் கொண்டிருந்தார் சுமதி. அப்போது குடிவரவு சோதனைக்குத் (immigration check) தயாராகும்படி அறிவிப்பு வந்தவுடன் வீரா விடை பெற எத்தனித்தான். அன்று ஒரு நாள் விடியற்காலை நல்லசிவம்-விசாலாட்சி போலவே, வாசுதேவன்-சுமதி தம்பதியினர் முகங்களிலும்  கவலை ரேகைகள் படர ஆரம்பித்தது. உணர்ச்சிப் பெருக்கில் பீறிட்டு வரும் கண்ணீரை அடக்க நினைத்துத் தோற்கிறார் சுமதி. மனைவியைத் தேற்ற மகனைப் பிரியும் தனது துக்கத்தை வெளிக் கொணராமல், மகனின் முதுகைத் தடவிக் கொண்டே புன்னகைப்பதில் நாகேஷ் நடிப்பை மிஞ்சுகிறார் வாசுதேவன்.
பெற்றோரைப் பிரிய மனமில்லாமல் தனது இரு கரங்களாலும் அவர்களை ஒரு சேர இறுக அணைத்துக் கொள்கிறான் வீரா. "ஆன்ட்டி.. அழாதீங்க.. சீக்கிரமா அடுத்த லீவுக்கு வரோம்.." என தேற்றினார் மருமகள். மீண்டும் ஒரு அணைப்புக்குப் பிறகு கையசைத்துக் கொண்டே தத்தம் தங்களது தள்ளு வண்டியை (trolley) தள்ளிக் கொண்டு
பயணிகளுக்கு நடுவில் ஒரு புள்ளியாய் மறைந்தனர் வீரா குடும்பத்தார் . தடுப்பு வேலியின் மீது தலையைச் சாய்த்து இறுக்கமான முகத்துடன், நிலை குத்திய பார்வையுடன் தனது மருமகள் கூறிய அறிவிக்கப்படாத அடுத்த விடுமுறையப் பற்றி அசை போடத் துவங்கியது அந்த தாயுள்ளம்!!

அச்சமயம் விமானத்தில் அப்பா தனக்கு வீரவநல்லூரில் கொடுத்த சிறிய கூழாங்கல்லை பையில் இருந்து எடுத்து தரும்படி கேட்டாள் சாரா. பெரிதாக ஆபத்து விளைவிக்க கூடிய பொருளாக அது இல்லாததால் குடியுரிமை அதிகாரிகள் மறுக்கவில்லை. சென்னையில் தன் வீட்டினில் இத்தனை ஆண்டு காலம் அதனை பொக்கிஷமாக பராமரித்து வந்த வீரா அதை சாராவுக்கு கொடுக்கலானான்.
"ஹவ் திஸ் பெப்பிள் இஸ் மேட் டாட்?" - ஆங்கிலத்தில் கேட்ட மகளுக்கு தாய்மொழியாம் தமிழில் விளக்கினான் வீரா.
"ஒரு பெரிய மலையில பாறையா இருந்த இந்த கல்லு பல வருஷம்  மழை காலத்துல உருண்டு வந்து பல செடி, மரங்களுக்கு நடுல சிக்கி, வெயில்ல வதங்கி, திரும்ப மழைல நெனஞ்சி எல்லா பருவ காலத்தையும் பாத்து, அதனோட கரடு முரடான நிலைல இருந்து மாறி வழவழப்பா இப்டி கூழாங்கல் ஆகுது. நம்மளும் அப்டி தான்.. இந்த பெப்பிள் மாறி வழவழப்பா மாறணும் னா வாழ்க்கைல எல்லா இன்ப துன்பத்தையும் கடந்து வரணும்."  என்று பொறுப்பு மிகுதியில் பேச குழந்தை சாரா எல்லாம் புரிந்தவளாக தலை ஆட்டினாள். அவளுக்கு இருக்கை அரைக்கச்சு (seat belt) மாட்டி விட்டு நெற்றியில் முத்தம் பதித்தான் வீரா. சாராவின் பிஞ்சு கைகளில் இருந்த கூழாங்கல்லில் மண்வாசனை வற்றிப் போயிருந்தது.


-சுர்ஜித் குமார்
                                                     

Thursday, 12 January 2017

பயாலஜி இரவுகள்

"நிச்சயிக்கப்பட்ட எண்ணங்கள் எப்போதும் நிச்சயமற்றதாக இருப்பதில்லை.. அதன் கண்ணோட்டங்களே அதனை தீர்மானிக்கின்றன." - நிச்சயமாக அநாமதேயர் அல்ல
விரக்தியின் உச்சத்தில் கழிவறையில் அமர்ந்திருந்த போது மேற்கூறிய தத்துவத்தை உதிர்த்தது தத்துவஞானி ஒருவர். அத்தத்துவ ஞானி நானன்றி வேறாரும் இலர்.

எதற்கிந்த விரக்தி? 'நான் யார்? நான் யார்?' குடியிருந்த கோயில் படத்தின் பாடல் வரியினைப் பற்றி இங்கு நான் குறிப்பிட வரவில்லை. சுய பரிசோதனை பற்றியும் குறிப்பிட முனையவில்லை. ஏனெனில் சுய பரிசோதனை என்பது, வாழ்வில் ஏதேனும் ஒரு புள்ளியைத் தொட்டவர்களுக்கானது. இன்னும் புள்ளியே வரையப்படாத என் வாழ்வில் அதன் காரணங்களை அறிய இதோ புரட்டுகிறேன் பிரம்மனின் அச்சுப்பிழைகள் நிறைந்த என் வாழ்வியலின் முதற் பக்கங்களை...

எனது பள்ளிப் பருவத்தின் பனி காலத்தில் ஓர் நாள், ஆசிரியை ஒருவர் வகுப்பு மாணாக்கரிடம் தங்கள் குறிக்கோள் என்ன, என்னவாக விழைகிறீர்கள் என கேட்டார். ஒவ்வொருவரும் டாக்டர், என்ஜினியர், போலீஸ் என அதே தொல்காப்பிய காலத்து பதிலைக் கூறி லஞ்ச் பெல் எப்போது அடிக்கும் என எதிர்ப்பார்த்து மூக்கு சளியை உள்ளுறிந்து கொண்டே அமர்ந்தனர். மூன்றாம் வரிசையில் சன்னலோரம் அமர்ந்திருந்த அந்த குண்டுப் பையன் மட்டும் 'டிரெயின் டிரைவர்' எனக் கூறியதாக ஞாபகம். அவனைப் பொறுத்தமட்டில் டிரெயின் டிரைவர்கள் ஹீரோக்களாக தெரிந்திருக்கக் கூடும். குண்டுப் பையன் ஆசனத்திற்கு ஒரு பென்சிலை சீவி வைத்து விட்டு, என் அபிலாஷையை சொல்ல நான் எழுந்தேன். "கார்டியாலஜிஸ்ட்" - என் திருவாய் மலர்ந்தேன்.

"கார்டியாலஜிஸ்ட்" - டிரெயின் டிரைவர் என்ற வார்த்தையை கேட்ட அதே ஐந்தாம் வகுப்பில் அந்த வார்த்தை சற்று வித்தியாசப் படவே செய்தது. ஏதோ வேற்று கிரகவாசி பதிமூன்றாம் வாய்ப்பாடு பாடியதைப் போல் என் ஆசிரியை உட்பட அனைவரும் ஒரு கணம் என்னை உற்று நோக்கினர். ஒரு மருத்துவமனையின் உட்சுவற்றில் மருத்துவர்கள் பெயர் தாங்கிய பெயர் பலகையில் அந்த மாய சொல்லை பார்த்த ஞாபகம். தொல்காப்பியங்களுக்கு இடையில் சுஜாதாவின் கதையாக இருக்கட்டுமே என 'கார்டியாலஜிஸ்ட்'- சொல்லி வைத்தேன். சில வினாடிகள் இடைவெளியில் ஆசிரியையின் கைத்தட்டலால் அங்கு ஆட்கொண்டிருந்த அமைதி மரணத்தைத் தழுவியது. மூக்கு சளிகளும் கோரசாக கைகளைத் தட்டின. புட்டத்தில் பென்சில் வாங்கியிருந்த குண்டுப் பையன் மட்டும் ரயிலேறி கோமாவுக்கு போயிருந்தான். எனக்கு நன்கு நினைவிருக்கிறது.. நான் கூறிய அந்த மாயச் சொல்லை கேட்டு முதல் வரிசையில் அமர்ந்திருந்த மாணவி ஒருவள் பெருமிதத்தோடு என்னை நோக்கினாள். என்னை ஏதோ அறிவு ஜீவியாக அவள் சித்தரித்திருக்கக் கூடும். அந்த மாணவி இன்று நிஜத்தில் ஒரு கார்டியாலஜிஸ்டாக ஆகி விட நான் இன்னமும் சாலையில் நிறுத்தப் பட்டிருக்கும் கார் கண்ணாடிகளில் பிம்பம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதே வேளையில் அவள் இதய மாற்று அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டிருக்கக் கூடும்

அநேகமாக அதுதான் எனது முதல் ஆசையாக இருந்திருக்கக்கூடும். பின்னாளில் அதே ஆசை ஆசையாகவே பழுத்து அழுகியும் போனது. வார்த்தை பிறழாமல் படிப்பதென்பது எனக்கு இயல்பிலேயே கிடைத்த வரம் எனக் கூறலாம். செய்தி வாசிப்பாளராக ஆக வேண்டுமென ஒரு ஆசையும் அந்நாட்களில் துளிர்த்தது. அந்த வரம் ஒரு நாள் சாபமாக மாறிப் போன கதையும் அதே பள்ளிப் பருவத்தில் ஒன்பதாம் வகுப்பின் போது நிகழ்ந்தது. என் பள்ளியில் நடக்கவிருந்த அறிவியல் கண்காட்சிக்கு மாணவர்கள் ஒவ்வொருவரும் குழுவாகவோ தனியாகவோ ஒரு மாடலை செய்து காட்சி படுத்த வேண்டும். நாம் தான் ஐந்தாம் வகுப்பிலேயே கார்டியாலஜிஸ்ட் ஆனோமே. ஆகையால் மமதையில் பயாலஜி மிஸ்ஸுக்கு ஐஸ் வைக்கலாமென்று பயாலஜி சப்ஜெக்ட்டில் மாடல் ஒன்றை செய்து காட்ட வேண்டும் என தீர்மானித்து அதை அவரிடம் தெரிவிக்கவும் செய்தேன். உடன் பெருமிதமும் ஆர்வமும் கலந்த பயாலஜி மிஸ் அது என்னவென்று வினவ, நான்,"ரீப்ரொடக்டிவ் சிஸ்டம்" என்றேன்.

சற்றே கலவரமடைந்த அந்த பயாலஜி மிஸ்,"ரீப்ரொடக்டிவ் சிஸ்டம் இன் வாட்?" என கேட்டார். பதிலுக்கு நான்,"இன் ஹ்யூமன்" என்றேனே பார்க்கலாம். அவ்வளவுதான்.. விருட்டென்று ஸ்டாஃப் ரூமுக்கு விரைந்தார். விருதுக்கு சிபாரிசு செய்ய செல்கிறார் என நினைத்து கர்வத்தோடு சேமியா மீசைகளாகவும் துப்பட்டா தேவதைகளாகவும் மாறியிருந்த மூக்கு சளிகளை நோக்கினேன். இரட்டை ஜடைக்காரி தேவதை ஒருத்தி எத்தியோப்பியா நோக்கி முகத்தை திருப்பிக் கொண்டாள். அப்போது தான் ஒரு அணில் பல்லன் நான் உளறியதை எனக்கு உணர்த்தினான். 'ரெஸ்பிரேட்டரி சிஸ்டம்' என்பதற்கு பதில் 'ரீப்ரொடக்டிவ் சிஸ்டம்' என நான் வேண்டுமென்றே கூறினேன் என கம்ப்ளெயின்ட் செய்து விட்டிருந்தார் அந்த வட்ட நெத்தி பொட்டு பயாலஜி மிஸ். பின் கண்டிக்கிறேன் பேர்வழி என என் பெற்றோரைக் கூப்பிட்டு நான் பூப்பெய்தி விட்ட தகவலை அவர்களுக்கு தெரியப்படுத்தினர். அன்று முதல் நான் ஒரு சீரியல் ரேப்பிஸ்டாகவே அனைவருக்கும் தெரிந்தேன். பயானனமாகவே நகர்ந்தன அந்த பயாலஜி இரவுகள்!

அது சமயம் கணிதம் என் வாழ்வின் பெரும் பகுதியினை ஆட்கொண்டிருந்தது. ஆம், பெரும்பகுதி. ஒரு முறை கூட என்னை அது ஒரே முறையில் கடந்து சென்றதில்லை. என் மீது கொண்ட காதலின் பால் ஒவ்வொரு தேர்வுகளின் போதும் நான் அவளை (கணிதம்) ஸ்பரிசித்துக் கொண்டே இருக்க வேண்டியிருந்தது. ஆனால் இது நாள் வரையில் என் வாழ்வில் நான் எங்கும் இன்டக்ரல், டிஃபரன்ஷியல் கால்குலஸை பயன்படுத்தியதில்லை. டிரிக்னாமெட்ரி, ஜாமெட்ரி, அல்ஜீப்ரா, கடவுளே!! முகநூலில் பதிவுகள் இடுவதற்கு இவையாவும் எனக்கு எப்போதும் பயன்பட்டதே இல்லை.

கண நேரத்தில் வாகா எல்லையில் இருந்து வாலாஜாபாத்திற்கு 'யூ டர்ன்' அடிக்கும் ஆட்டோக்கள், நெடுஞ்சாலையை கோசாலை ஆக்கி பைக்கில் பால் வாங்க சென்றவனை அதே பாலை அவனுக்கு ஊற்றி பாடையில் அனுப்பும் மாட்டுக்கார வேலன்களைக் கண்டு கடுங்கோபமடைந்த நான் பிரதமர் ஆக வேண்டும் என விழைந்தேன். ஆம், பாக்கு போட்டு கண்ட இடங்களில் துப்பும் அந்த சிகப்பு பெயின்ட் வாய்களில் பம்புசெட் அமைத்து டெல்டா மாவட்டங்களுக்கு திருப்பி விட்டு முப்போகம் விளைவிக்க எண்ணினேன். மும்மாரி பொய்த்தாலும் இவர்களின் 'தூ'காறி பொய்க்காது. தன் ஜீரணா சக்தியிடம் ஜெயித்த கரடி ஒன்று ஆசன வாயால் ஏப்பம் விடுவது போன்றதொரு விநோதமான சப்தத்தை ரூட்ஸ் ஹாரன் எனும் பெயரில் வைத்துக் கொண்டு யமனையே அச்சுறுத்தும் வேகத்தில் சீறும் யமஹா பாய்ஸை கிராண்ட் பிரிக்ஸ்  பந்தயத்திற்கு கடத்திச் சென்று பதக்கப் பட்டியலில் இந்தியாவின் பெயரை பொறித்து விடலாம் என்றும் எண்ணினேன். 'காலைக் கடன் கழிக்க வந்த கழக 'ஆய்'வாளரே' என்று முக்கிய பிரமுகர் முக்கியதற்கும் போஸ்டர் ஒட்டும் சில அரசியல்வியாதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கி நாட்டை தூய்மையாக்கிட துடித்தேன். சேகு வேராவை போன்று புரட்சியாளனாய், சைலேந்திரபாபு போன்று .பி.எஸ் ஆபிசராய், இளம்பெண்களின் கனவுக்கண்ணனாக வலம் வர கங்குலி போன்று ஒரு கிரிக்கெட் வீரனாய் ஆகி விடலாம் என்று கூட எண்ணியதுண்டு. பின்பு தான் புரிந்தது, கங்குலியின் ஷாட்டுகளை (மாதர் சங்கங்கள் கவனத்திற்கு - இங்கு நான் குறித்திருப்பது கிரிக்கெட் ஷாட்டைப் பற்றி) விட அவரின் தோற்றமே பெண்களை அதிகம் வசீகரித்திருக்கிறது. எந்தவொரு பதவியோ தொழிலோ சமுதாயத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டு அதற்கு நான் தான் காரணம் என ஊர் புகழ வேண்டுமென நினைத்து நினைத்து, பின்னர் அதற்கு நீண்ட நெடிய தூரம் பயணிக்க வேண்டுமென பாதியிலேயே அவைகளை கை விட்டதின் விளைவு ஓவர் நைட்டில் ஒபாமா ஆகும் என் கனவினை சிதைத்து விட்டிருந்தது

எனது அழுகிய ஆசைகளை அழகிய திரைக்காவியமாய் படைத்திட உயர்நிலை பள்ளிப்படிப்பின் போது ஒரு ஒளிப்பதிவாளராக இயக்குநராக ஆகி விட துடித்தேன். என்னை விஷுவல் கம்யூனிகேசன் சேர்த்து விடச் சொல்லி வீட்டில் மன்றாடினேன். அதெல்லாம் பணக்காரர்களுக்கான படிப்பு எனக் கூறிய என் உறவினர்களின் பேச்சுக்கு மதிப்பளித்து என்ஜினியரிங் என்னும் சோஷலிச உலகத்திற்கு நானும் தள்ளப்பட்டேன்.

இப்போது, ஒருவாறு என்ஜினியரிங் பட்டம் வாங்கி விட்டிருந்தேன். என் திருமண பத்திரிகையில் என் பெயருக்கு பின்னால் பி.டெக். என அச்சாகி என் அம்மாவை அது சந்தோஷப்படுத்தும். உண்மையில் நான் என்ஜினியர் தானா? நான் எந்தவொரு பாலத்தையும், சாலையையும் அமைத்திருக்கவில்லை. கொத்தனார்களும் மேஸ்திரிகளும் அதனை செய்து கொண்டிருக்கிறார்கள். எந்தவொரு என்ஜினையும் உயிர்ப்பிக்கவில்லை. மெக்கானிக்குகள் அதனை செய்து கொண்டிருக்கிறார்கள். குறைந்தபட்சம் ஒரு கம்ப்யூட்டர் என்ஜினியராக பைனரி இலக்கங்களான 11110000-வை கம்ப்யூட்டர் எப்படி புரிந்து கொண்டு செயல் படுகிறது எனக் கூட என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை

எனது வாழ்வியல் புள்ளிக்கான தேடுதலில், சுணக்கம் ஏற்படுத்தும் வகையில் திட்டமிடாது செயல்பட்டு, தோல்விகளுக்கு முழு காரணம் நான் தான் என பொறுப்பேற்கும் முதிர்ச்சியே என் வாழ்வில் இதோ வரையப்பட்டிருக்கும் புள்ளி!

ஆக, என் விரக்திக்கான காரணமும் லட்சியமும் புலப்பட்டது. நான் இப்போதொரு எழுத்தாளன்!!

"லட்சியம் எப்போதும் கோலங்களின் கீழ் இருக்கும் புள்ளிகளில் இருந்து தான் பிறக்கின்றன..."
-மீண்டும் அதே தத்துவ ஞானி, நான், பயாலஜி இரவுகளின் நினைவுகள் கலைந்து, கழிவறை தாழ் திறந்து வெளியேறிய போது.